Saraswathi, My Grandma is known for her unyielding spirit. She is my friend with whom I can share anything and everything under the sun. She is found reflected in me as full moon reflects in a little pool. I have written this poem dedicating to all her grandchildren.
என் பாட்டி
பழங்கதைகள் பேசாதவள்.
புதுமைதனை ஏசாதவள்.
பாட்டிகள் பரம்பரையில் , இவள் புதியவள் !
அனைத்தும் அறிந்தவள்!
நான் முரட்டு வீணை,
என்னை மீட்கத்தெரிந்த சரஸ்வதி !
இவளின்றி எனக்கில்லை வேறு கதி .
முறையிடவும், முட்டியழவும் , சிரிக்கவும், சிந்திக்கவும்,
நான் தேடி செல்லும் யுவதி!
அனைத்தும் சொல்ல ஒரு செல்ல தோழி!
இவள் வழியில் செல்ல இல்லை தோல்வி.
என் தாய்க்கு இவள் தாய் .
இவளுக்கு நான் என்றும் இனிய சேய் !
என்னில் இவளைக் காணலாம்,
இவளில் என்னைக் காணலாம்!
ஏனென்றால் நான் இவளின் மிச்சம்.
இவள் தோள் கொடுக்க, அனைத்தும் துச்சம் .
குப்பிகளில் மாத்திரைகள் போல் ,
மனதின் சிப்பிகளில் அடைத்தனள் முத்துச்சுமைகள்...
முகத்தில் அப்பிக்கிடக்கும் சோர்வினை ,
துடைத்தெறிவாள் ஒரு பார்வையில்!
தப்பிக்க வழி சொல்வாள் ,
தத்தளித்து நானிருக்கையில்!
என் குளத்துத் தாமரை ,
பூக்கும் இவளின் ஒளி கண்டு !
என் கண்ணில் நீர்த்துளி ,
நீங்கும் இவளின் மொழி கேட்டு!
அன்பாக அணைத்து , தலை கோதி ,
ஆசிர்வதித்து ஆதரிக்கும் ஜோதி!
என் குலத்தின் விருட்சம்!
என் ஆதர்ச தெய்வம்!
பிரிக்க பிரியா பிரியத்தாள் !
உரி க்க உரி யா உறவுத்தாள் !
அழிக்க அழியா நனைவுத்தாள் ,
அளக்க முடியா அன்புத்தாள் !
நளனுக்கும் சொல்லித்தருவாள்,
நல்ல சமையல் செய்வது பற்றி!
புலன்களுக்கு புத்துயிர் தருவாள்,
அன்பு கலந்த காப்பி கொடுத்து!
அனைவரும் உலகினில் , வீட்டினை தேடுகையில்,
இவள் படைத்தனள் வீட்டினில் உலகை!
பெருமைகள் பலவுடையது இவள் கை!
அருமையாய் பலர் வாழ்வில் சூட்டியது வாகை!
இவளைப்பற்றி எழுத இல்லை இன்னும் எதுகை!
இவள் அல்ல வெறும் பாட்டி,
வாழ்க்கை கடல் உணர்ந்த படகோட்டி!
இவளிடம் உண்டு அனைத்திற்கும் விளக்கம்!
இவள் கரை சேர விரும்புவோரின் கலங்கரை விளக்கம்!