Friday, March 14, 2008

மறதிப் பெருநதியில்

மறதிப் பெருநதியில் மூழ்கித் தான் போகின்றேன்,
 என்னையும் அறியாமல்... 
கேட்வால்வ் மூட மறக்கிறேன்...
துளி துளியாய் அதன்வழியே, 
தண்ணீர் சிந்தி சிந்தி, என்னை ஏளனம் செய்கிறது. 
கதவினை தாளிட மறக்கிறேன்...
மின்விசிறியினை அணைக்க மறக்கிறேன்... 
நான் செய்கின்ற ரசமான ரசத்தில், 
பெருங்காயத்தூள் சிறிது தூவ மறக்கிறேன். 
உடுத்தும் உடைக்கேற்ப விதவிதமாய், 
காதணி, வளையல் சூட மறக்கிறேன்.
இப்படி அவ்வப்பொழுது, மறதிப் பெருநதியில், 
மூழ்கித்தான் போகின்றேன். 
சிலவற்றை நானே மூழ்கடிக்க, நினைத்தாலும் முடிவதில்லை. 
சிறுவயதில் அக்கா டாடா காட்டாமல், 
சிடுசிடுவென பள்ளிக்குச் சென்றது. 
எதற்கெடுத்தாலும் நானும் அழுது, 
மற்றவர்களையும் நோகடிக்கச்செய்தவை... 
பிறரின் தேவையே இல்லாத, அறிவுரைகளும்,ஆளுமைகளும்...
உணர்வுகளை மதிக்காமல்,
மிதித்திட்ட சில தருணங்களையும், 
முழுதாய் மறதிப்பெருநதியில், மூழ்கிடுமாறு அழுத்துகின்றேன்... 
அப்பொழுது மூழ்கினாலும், 
எனக்கே தெரியாமல், எனது ஞாபகப் பெட்டகத்திற்குள், 
ரகசியமாய் நுழைந்துவிடுகிறது. 
மறக்க நினைத்த அத்தனையும் ஞாபகமாய்! 
மறதிப் பெருநதியில், ஞாபகப் பெட்டகத்துடன், 
நித்தம் பயனிப்பவர்களில், நானும் ஒருத்தி!  

Monday, February 04, 2008

முகம் :
சிங்கமென  கர்ஜிக்கும்  சில முகம்...
நரியென நலம் விசாரிக்கும் சில முகம்...
இப்படி பல முகங்கள்,
 நகல்களாய்  என் முன் நிழலாட...
நானும் தேடிச்  சென்றேன்,
மரக்கிளையில் அணில் முகத்தையும் ,
பூஞ்சோலையில் மான் முகத்தையும் ,
பாசத்தோடு நட்பு பாராட்ட...
ஆனால் அவையோ என் மனித முகம் கண்டு,
மிரண்டு ஓட ,
நித்தமும் காத்திருக்கிறேன் ...
தளரா நம்பிக்கையுடன்...
என் மேல் அணிலுக்கு, மானுக்கும் ,
நம்பிக்கை துளிர் விடுமென!