Tuesday, November 02, 2021

ஒளியும் இருளும்



அழகியதாய் மலைகளை   கடந்து,

ஊரை  நோக்கி ஊர்ந்துகொண்டிருந்தது,

எங்கள்  மகிழுந்து மகிழ்ச்சியில்!

காலை கதிர்,  பசுமையில்  படர்ந்து,

பட்டு போல் ஜொலித்தன வயல்கள்!

வானுயர காற்றாடிகளை ரசித்தபடி,

நண்டு சிண்டுகளாய் பிள்ளைகள்! 

இளையராஜாவின் இசையை சுவாசித்தபடி,

என்னவரும், நானும் மற்ற இருவரும்.

பிள்ளைகளின் பொருட்டு ,

எப்பொழுதும் மிதமான  வேகத்தில் ஓட்டுபவர்,

அன்றும்  விவேகமாகவே ஓட்டினார்.

ஊர்தி, இவர் கைகளில், கம்பீர நடையுடன்,

ராஜபாட்டையில் சென்றுகொண்டிருந்தது .

நண்பர்கள் இருவரும் நிகழ்ந்தவைகளை,

நகைச்சுவையாய்  உரைத்திட,

நானும் தோழியும்  சிரித்திட்டோம் .

மனதிற்கினியன , கண்ணுக்கினியன , காதிற்கினியவை ...

கண்ணிமைக்கும் நேரத்தில்,  மின்னலென,

மதியற்று,  மிகவேகமாய்    பாய்ந்தது,

தலைக்கவசம்  அணியாத முதியவரின் ,

சின்னஞ்சிறு வாகனம்.

யோசிக்காமல் பின்னால் பார்த்தபடியே,

அவர் செய்த  பெரும் பிழை.

உடன்  எங்கள் ஊர்தியை நிறுத்தியும்,

பயனற்றுப்போய்  அவர்  வந்து இடித்திட்டார்.

நெற்றியில் பட்டு குருதி வழிய,

சுருண்டு விழுந்தார் பெரியவர்.

அவசரமாய்  அவரைக் கூட்டிக்கொண்டு,

ஆஸ்பத்திரி சென்றார் என்னவர்...

பொழுது சாயும் வேளை  வந்தது...

பெரியவரின் பொழுதும் அன்றுடன் சாய்ந்தது.

மனம்  முழுதும் இருள் சூழ்ந்து,

கசப்பாய்  வீடு திரும்பினோம்.

இது நடந்து இரு வருடம் ஆகிறது...

இன்று  வரை  தொடர்கிறது,

கோர்ட்டும், கேசும் .

பிள்ளையை போல செல்லம் கொஞ்சிய,

எங்கள் வாகனமும்  இல்லை இப்பொழுது...

மனம் நொந்து, மற்றவர்க்கு விற்றுவிட்டார்.

காப்பாற்ற சென்ற என்னவரை,

சுழற்றி அடிக்கிறது  சட்டம்.

பிழை என்ன செய்தோம்  நாங்கள்,

மனிதத்திற்கு கிடைத்த பரிசா இது?

இனியாவது தலைக்கவசம் அணிந்து செல்வார்களா?

சாலை விதிகளை மதிப்பார்களா?

இன்றும் கூட அவசரமாய் ,

விதிகள் மீறி கடப்பவர்களை ,

காணும் பொழுது  அதிர்கிறது மனம்.

மாண்டவர் வருதில்லை...

மீண்டவர்க்கு அமைதி இல்லை...




                      



Thursday, July 01, 2021

ஊர் திரும்பல்

கயல்விழிகள் காணாது,

முயல்களும் வியந்தது.

பூம்பாதம் பாவாமல்,

புல்வெளியும் தேடியது.

மென்கைகள் தடவாது,

மலர்களும் வாடியது.

ஆரஞ்சும், எலுமிச்சையும்,

தங்களுக்குள் பேசிக்கொண்டது

தங்களை உருட்டி விளையாடும்,

அந்த  சிரிப்பழகி  எங்கேயென்று?

ஊஞ்சலங்கே காற்றிலாட,

தென்றல் வந்து சொன்னது,

சாரா குட்டி சாண்டியாகோ விட்டு,

தன் பாட்டி வீடு சென்றாள் என்று!

முயலும், புல்லும், மலரும்,

முகம் மலர்ந்து துள்ளியது,

எப்போதும் அவள் கைகள்,

உயர்த்திக் காட்டும் விமானம் கண்டு!

ஆரஞ்சும், எலுமிச்சையும் பூரித்தது,

பழம் நழுவி பாலில் விழுந்ததென!

வானவில்லும் வந்தங்கு,

வண்ணமாய் கையசைக்க,

அன்பின் ஊற்று விழியில் வழிய,

தோழி எரிகாவும்  வழியனுப்பினாள்.

வேடந்தாங்கல் நீங்கும் பறவையாய் ,

தந்தையின் அரவணைப்பில்!

அம்மாவின் கண்மலரும் நீரிலாட,

அவள் மடியிலிவளை பூவாய் தாங்க,

கடற்கரையின் அலை போல,

சுருள் கேசம் அலை பாய,

வான ஊர்தி ஏறி வந்தாள்!

சங்கீத ராகம் பாடி,

வேடந்தாங்கல் விட்டு,

தன்னிடம் சேரும் பறவையாய்,

கைகளில் எல்மோ பொம்மை தாங்கி,

வீடெண்ணும் கூடு வந்தாள்,

தன் அண்ணனின் கை கோ்த்து!

கோடையில் வாடி நிற்கும்,

தாத்தாவிற்கும், பாட்டிக்கும்,

வசந்தத்தை கொண்டு வந்தாள்!









Thursday, May 06, 2021

கதை

                                                      வாழையடி வாழை.                                 

 வாணி பாலை அடுப்பில் வைத்துவிட்டு, எஃப். எம். ஐ உயிர்ப்பித்தாள். "மங்களம் அருள்வாள் மதுரைக்கு அரசி" பாடலை சீர்காழி கோவிந்தராஜன் அவர்கள் மனமுருக பாடிக் கொண்டிருந்தார்.  வாணியும் மெல்லிய குரலில் அவருடன் "அங்கயற்கண்ணி, அன்பு மீனாட்சி" என தொடரலானாள். மீனாட்சியம்மா எல்லாரும் நல்லா இருக்கணும் என மனதிற்குள் வேண்டிக்கொண்டு, பர பர என சமையல் வேலை ஆரம்பித்தாள். என்ன டல்லா இருக்கே?, என்றபடியே ஶ்ரீராம் வந்தான். அவளுக்கு என்ன என்றாலும், முகத்தை பார்த்தவுடன் கண்டுபிடித்துவிடுவான். ரொம்ப அசதியாவும், கைவலியாவும் இருக்கு என்றாள். உன்னை யார் எல்லாத்தையும் இழுத்துப்போட்டுக்க சொன்னா? என கடிந்து கொண்டான். மாமி தான், வீடு காலியாரப்பவே வண்ணம் பூசும் வேலை செய்யலான்னு  சொன்னாங்க, என சொல்லி முடிக்கும் முன்பே, இந்த வீட்ல யார் என்ன சொன்னாலும் கேளு, கஷ்டப்படு. ஆஃபிஸில் ஆடிட்டிங் நேரத்தில், ஏன் இப்படி படுத்தரே? எங்கிட்ட ஒரு வார்த்தை கேட்டியா? என கத்திவிட்டு தேநீர் கோப்பையுடன், பேப்பர் படிக்க போய்விட்டான். சிறிது நேரம் கழித்து வந்து, அவங்கபாட்டுக்கு ஊருக்கு போயாச்சு என ஆரம்பித்தான். சரி இப்போ மாமியை ஒன்னும் சொல்லாதீங்க,  அவங்களுக்கு பெயிண்ட் ஒத்துக்கலை. அவங்க சொல்றதிலும் நியாயம் இருக்குதானே. அப்புறம் எப்போ வீட்டை சீர் செய்யறது? என சமாதானப் படுத்தினாள்  வாணி. சரி, சரி, நீ ரொம்ப ஸ்ட்ரெயின் பண்ணிக்கதே. முடிஞ்சா லீவ் போட்டுடு என  ஆதரவாய் பேசினான்.. இட்லியும் சாம்பாரும் சாப்பிட்டுவிட்டு, மதியம் கேன்டீனில் சாப்பிடுவதாக சொல்லிவிட்டு 8 மணிக்கே கிளம்பிவிட்டான். இதனிடையே பிள்ளைகள் இருவரும் எழுந்து வந்து, குளித்து ,சாப்பிட்டு முடித்தனர். அவள் எதைப்  பற்றியும் நினைக்க வேண்டாம் என்றாலும் ஏதாவது ஒன்று  மனதில் ஓடுகிறது.யோசித்துவிட்டு ஆபீஸுக்கு  லீவ்  சொன்னாள். மதியத்திற்கும் சேர்த்தே சமைத்திருந்தாள். இரு  பிள்ளைகளையும் பள்ளிக்கு (ரூமிற்கு ஒன்லைன் கிளாஸுக்கு )அனுப்பிவிட்டு, குளித்து முடித்து , பூஜை செய்துவிட்டு, கடிகாரத்தைப் பார்த்தாள் . சரியாக 9 மணி. சாப்பிடவும் தோன்றவில்லை. கீழே சென்று உட்காரலாம் என வந்துவிட்டாள்.

இரண்டு வாரங்களாக அலுவலகத்திலும் வேலை பளு  அதிகம். டைப் அடித்து, அடித்து விரல்களில் தொடங்கி கழுத்து வரை வலி. தன்  தோள் கழண்டு விழுந்து விடுமோ எனவும் எண்ணினாள். வீட்டிலும் ஒன்றன் பின்னால் இன்னொன்று என நிலை கொள்ளாமல் வேலை. சரி சிறிது நேரம் நியூஸ், பேஸ்புக் பார்த்து ஆசுவாசப்படுத்திக் கொள்ளலாம்  என்றால், பிரஷர் ஏறுவது தான் மிஞ்சுகிறது. வீட்டினை சீர் செய்து நெடுநாட்கள்  ஆகிவிட்டது. நாத்தனாரின் திருமணத்திற்கு வண்ணம் பூசியது. பதினைந்து  வருடங்களுக்கு மேல் இருக்கும். வீட்டின் மேல் போர்ஷனில் குடியிருந்தவர்கள் வேலை மாற்றலாகி , சென்ற மாதம் வீட்டைக் காலி செய்தனர். சிறிது நாள் மேல் போர்ஷனில் தங்கி , கீழே சீர் செய்துவிட்டு, பிறகு மேலேயும் சீர் செய்து புதிதாய் குடிவைக்கலாம் என்று மாமி யோசனை கூறினார்கள்.. ஆனால் வீட்டில் யாருக்கும் இதில் இஷ்டம் இல்லை. பிறகு பார்த்துக் கொள்ளலாம் என்று விட்டால், இப்பொழுது இருக்கும் நிலைமையில், வண்ணம் பூச ஆள் கிடைப்பது அரிது என, கிடைத்த போதே, காண்ட்ராக்ட்  பேசி  விட்டாள். பெயிண்ட் வாசனை அலர்ஜியாகி, மாமாவும், மாமியும் பெண் வீட்டிற்கு சென்று விட்டனர். நாத்தனார் சுதாவும் அவளது அப்பா, அம்மாவைப்  பார்த்தே ஒரு வருடம் ஆகிவிட்டது, சில மாதம் அவள் வீட்டிலிலேயே இருக்கட்டும் என கெஞ்சாத குறையாக கேட்க , சென்ற வாரம் தான் ஸ்ரீராம் தன் தாய் தந்தையை பத்திரமாக தங்கை வீட்டில் விட்டு வந்தான். யானை தன் தலையில் தானே மண்ணை போட்டுக்கொண்டது போல அனைத்தும் இப்பொழுது வாணியின் தலையில். அலுவலகம் விட்டு வீடு வந்தால், பிள்ளைகளும், கணவரும் முறைக்கின்றனர். எல்லோரைப் போல தனக்கும் தான் பெயிண்ட் வாசனைக்கு  தலையை வலிக்கிறது. அவள் எங்கே செல்வாள்? இதனால் மன அழுத்தம் அதிகமாகிவிட்டது. இதோ இன்னும் சிறிது நேரத்தில் சுவர்களுக்கு வண்ணம் பூச பெயிண்டர்கள்  வந்து விடுவார்கள். தினமும் அவர்களிடம் போனில் தான் பேசுகிறாள். இன்றாவது பக்கத்திலிருந்து பார்க்க வேண்டும். எங்கெங்கு என்னென்ன நிறம் பூசலாம் என்ற ஆலோசனை கூட யாரும் சொல்லவில்லை. போனால் போகிறதென்று மனதை தேற்றிக்கொண்டு, மாமிக்கு இப்பொழுது எப்படி இருக்கிறது என கேட்கலாம் என தொலைபேசினாள். இப்பொழுது தேவலை என்றும், மாமாவிற்கு  லேசாக ஜலதோஷம் என்றும்  சொன்னாள். பெயிண்ட்  அடிக்கும் பொழுதே, சமயலறையில், நமக்கு வசதியாக கப்போர்டுகள், மற்றும்  சில மர  வேலைப்பாடுகளையும் செய்துவிட்டால் என்ன ? என கேட்கின்றாள் மாமி. இப்பொழுதே தலை சுற்றுகிறது. உட் ஒர்க்குக்கு இன்னும் எவ்வளவு செலவாகுமோ ? அப்பனே, முருகா இது என்ன சோதனை? என எண்ணியவாறே தனது மகள் வீணாவின் அறையை ஒழுங்கு படுத்தினாள். அவளது அறைக்கு மட்டும் தான் வண்ணம் பூசி முடித்துள்ளது.

 வீட்டு வேலைக்கு வரும் வசந்தாவின் பெண்ணிற்கு திருமணம் நிச்சயமாகியுள்ளது. 25 வருடங்களாய் வேலை செய்து வருகிறாள். முன்பணமாக 30,000 தேவைப்படும். கொஞ்சம்  உதவுங்கள், சிறிது சிறிதாக கொடுத்துவிடுகிறேன் என்கிறாள். சேர்த்து வைத்த பணம் கொஞ்சம் தனியாக எடுத்து வைத்திருக்கிறாள். அதைத்தான் அவளிடம் தரவேண்டும். அஞ்சறைப்பெட்டியில் 100, 200 என சேர்த்து வைத்தது, யாருக்கும் தெரியாமல்...மற்ற வங்கி சேமிப்பில் இருந்து எடுத்தால் ஸ்ரீராம் என்னும் தன்  அன்புக் கணவன் கோபிப்பான். மாமி ஒன்றும் சொல்ல மாட்டாள். வசந்தா  தானே  எல்லா வீட்டு வேலைகளையும்  கச்சிதமாக செய்து தருகிறாள். வசந்தா போல ஒருத்தி  சுதாவுக்கு கிடைத்தால் தான் நிம்மதியாய் இருப்பேன் என்பாள். வீணாவும், விஷ்ணுவும் பிறந்த பொழுது  மாமாவின் வேலை பொருட்டு , மாமாவும், மாமியும் சென்னையில்  வசித்து வந்தனர். வாணியின் அப்பாவும், அம்மாவும் பிள்ளைகளை பார்த்துக்கொள்ள வந்து செல்வர். அம்மா அடிக்கடி சொல்வாள், வசந்தா  நல்ல குணமானவள், செய்யும் வேலையும் நேர்த்தி, எப்பவும் அவளை கூடவே வெச்சிக்கோ என்று. அப்பொழுதெல்லாம் 7.30 மணிக்கெல்லாம் வந்து தனக்கு ஒத்தாசையாய் எல்லா வேலைகளையும் செய்து தருவாள். பிள்ளைகள் பள்ளி விட்டு வரும் முன்னரே 3.30 மணிக்கெல்லாம் வந்து  அவர்களுக்கு பால் கலந்து கொடுத்து விடுவாள். அவளிடம் ஒரு சாவி கொடுத்து வைத்திருப்பாள். அக்கம் பக்கம் உள்ளவர்கள், இப்படி சாவி எல்லாம் கொடுக்கிறாய், உஷாராக இரு என எச்சரிப்பர். வாணி அதை எல்லாம் காதில் கூட போட்டுக்கொள்ள மாட்டாள். வசந்தாவின் முகம் கலையான, அன்பான முகம். அவ்வளவு வாஞ்சை தென்படும் அவளுடைய பேச்சில். சொன்ன வேலையை  மட்டும் செய்யாமல், நேரமிருந்தால் வீட்டை சுத்தம் செய்து தருவாள். எங்காவது மேஜை மேல், ட்ரெஸ்ஸிங் டேபிளில், வாணி தனது மோதிரத்தை மறந்து வைத்தால் கூட, அக்கறையாய் எடுத்து வந்து தருவாள். தான் வேலைக்கு வரவில்லை என்றாலும் முன் கூட்டியே சொல்லிவிடுவாள். மனம் பழைய நினைவுகளை அசை போட்டது. கதவு திறக்கும் சப்தம் கேட்டு திரும்பினாள் . இன்னிக்கு ஆபீஸ் போல? உடம்பு சரியில்லையா உனக்கு? என கேட்டவாறே வந்து தலையை தொட்டு பார்த்தாள்  வசந்தா. இல்லை, அசதியாக இருந்தது, அதான் போகலை  என்றாள்  வாணி. சரி நான் மேலே போயி காபி போட்டு கொண்டு வரட்டா ? எனக் கேட்டு, மேலே சென்று சுட சுட காபியுடன் வந்தாள். 

வீடு முழுதும் கூட்டி , துணி துவைத்து, பாத்திரமும் தேய்த்து விட்டு மெல்ல இவள் பக்கம் வந்து அமர்ந்தாள். வீணாவும் கிளாஸ் பிரேக்கில் கீழே வந்தாள். வசந்தாக்கா, ராணி அக்காவுக்கு  எப்போ கல்யாணம்? அம்மா சொன்னாங்க , ரொம்ப சந்தோஷம் கா ... என்றாள்,  பதினொன்றாம் வகுப்பு படிக்கும் வீணா. ஆமாம் பாப்பா, ராணிக்கு வர்ற ஆணி மாசத்துல கல்யாணம். நல்ல இடமா அமைஞ்சிருக்குமா. தூரத்து சொந்தம் தான். நல்ல மனுஷங்க. ஒன்னும் சீர் ரொம்ப எதிர்பாக்கலை. மாப்பிளை போலீஸ் வேலைல இருக்காரும்மா. நல்லா விசாரிச்சும் பார்த்துட்டோம், ரொம்ப கண்ணியம்னு பேர் இருக்கும்மா. இனிமேல  தான் எல்லா வேலையும்  என்றாள். எப்போ உனக்கு பணம் தேவைப்படும்?  என்றாள்  வாணி. அடுத்த மாசம் குடுக்க முடியுமா வாணிம்மா உன்னால? எனக் கேட்டாள். பின் அவளே, உன்னால முடிஞ்சப்ப குடும்மா, இன்னும் 4 மாசம் இருக்கில்ல...நான் இப்போவே உங்கிட்ட சொல்லி வெச்சிருக்கேன்.எவ்ளோ சிக்கனமா  கணக்கு போட்டு பாத்தாலும் ஒரு 30,000 கொறயுது. என் வீட்டுக்காரரும் கொஞ்சம் ஏற்பாடு செய்றேன்னு சொல்லிருக்காரும்மா என்றாள். சரிம்மா நான் எதித்த வீட்டு வேலைக்கு போகணும். வர்றேம்மா என்றாள். போகும் போது, அப்டியே இங்க  வந்துட்டு போ வசந்தா , என அனுப்பிவைத்தான் வாணி.

வீணா , வாணியிடம் வந்து அமர்ந்து, என்னம்மா ஆகுது உனக்கு? எப்பவும் லீவே  போடா மாட்டே? என் மேல கோவமா? சாரி மா என்றாள். வாணியின் கைகளை மெல்ல நீவிவிட்டாள். சரியா போயிடும் டீ ...நீ கவலைப்படாதே என்றாள். அம்மா எனக்கு ஒன்னு தோணுதும்மா...வசந்தா  அக்காவுக்கு நாம எதாவது  செய்யணும்மா...அதத்தான் நானும் யோசிக்கிறேன் என்றால் வாணி. அம்மா, நீங்க இப்போ கொடுக்க போறது கடன். நான் அதப்பத்தி பேசல. யாரோ ஒரு அறிவி ஜீவி நேத்து சொல்லிட்டிருந்தான் 5000,அல்லது 10000 ரூபாய்க்குள்ள ஓரளவுக்கு நல்லா கல்யாணம் பண்ணிடலாமாம். எந்த காலத்துல இருக்காங்க இவங்கல்லாம்? ஒரு ஹோட்டலுக்கு குடும்பத்தோட போயி சாப்டுட்டு வந்தாவே, ஆயிரக்கணக்கில் ஆகுது என புலம்பினாள் வாணி.அம்மா, டாபிக்கை விட்டு வெளிய போகாதே.ரொம்ப நியூஸ், facebook  பாக்கறே , அதனால தான் உனக்கு இப்படி டென்ஷன் ஆகுது என்றாள் வீணா. இன்னும் என்னென்ன இழிவா பேசறாங்க இவனைச் சேர்ந்தவங்க? இப்படிபேசினா நாக்குல சரஸ்வதி எப்படி தங்குவா? என மீண்டும் மனது ஆறாமல் தொடர்ந்தாள்  வாணி. அதைக்கேட்ட வீணா , நோ பாலிடிக்ஸ். இப்போ வசந்தா  அக்கா டாபிக் வாம்மா...அவங்களுக்கு எப்பவும் உதவ கொஞ்சம் பணம்  அவங்க அக்கௌன்ட்ல  டெபாசிட் பண்ணுங்களேன் என்றாள். நானும் , நீங்க, அப்பா, தாத்தா, பாட்டி தர்ற பணமெல்லாம் சேத்து வெச்சுட்டே வர்றேன். விஷ்ணுவும் அவனோட பணத்தை சேவ்  பன்றான், என சொல்லிக்கொண்டிருக்கும் பொழுதே அவனும் "குக்கூ...குக்கூ..." என பாட்டு பாடிக்  கொண்டே வந்தான். ஏதோ பெருசா பிளான் பண்றீங்க போல  என்றான். அவனிடம் விளக்கிய பின் சந்தோஷமாய் ஒத்துக்கொண்டான். நம்ம வசந்தா அக்காவுக்கு தரலைன்னா தான் தப்பு. எனக்கு அம்மை போட்டிருந்தப்ப, உனக்கு ஆபீஸ் லீவு போட முடியலை.எப்பவும் மறக்காது, ஒரு வாரம்  அவ்ளோ நல்லா பாத்துக்கிட்டாங்க என தன்னை சிறு வயதில் பாத்துக்கொண்டதை நினைவு கூர்ந்தான்..  நானும் கொஞ்சம் சேத்து  வெச்சிருக்கேன்  என்றாள்  வாணி. மூன்று பேரும்  சேர்ந்து தாங்கள் சேர்த்து வைத்ததை எண்ணினர். கணிசமான தொகையே இருந்தது. சரி அப்பா வந்ததும் நம்ம எல்லாரும் பேசி, கடன் குடுக்க ரெடி பண்லாம். வலது கை  கொடுக்கறது, இடது கைக்கு தெரியாம, வசந்தாவை கூட்டிட்டு போய்  எடுக்க முடியாதபடிக்கு, வட்டியும் சேர்வது போல டெபாசிட் செய்துட்டு வந்துடலாம். என்ன நான் சொல்றது என்றாள் மகளிடம் கண் சிமிட்டியபடி. வீணாவும், விஷ்ணுவும், கையை உயர்த்தி சரி என சைகை காண்பித்தார்கள். மறந்தே போச்சு, பெய்ண்ட்டர்கள்  அப்போவே வந்துட்டாங்க. கிச்சன்ல  என்ன கலர்  அடிச்சிட்டு இருக்காங்கன்னு  போயி பார்த்துட்டு ஆன்லைன் கிளாஸ் போங்க என்றாள். நான், வசந்தா வர்றத்துக்குள்ள மேல போயி சாப்டுட்டு, உங்களுக்கும், வேலை செய்யறவங்களுக்கு  டீ போட்டு கொண்டு வர்றேன் என்றாள். தன்  பிள்ளைகளை நல்லபடி தான் வளர்த்திருக்கிறோம்.வாழையடி வாழையாய், வாழட்டும், வாழவைக்கட்டும்  என மானசீகமாக  ஆசிர்வதித்து, அவ்விடம் விட்டு நகர்ந்தாள்.

Friday, March 12, 2021

கதை

சென்ற வாரம் https://engalblog.blogspot.com/  என்னும் வலைதளத்தில் வெளிவந்த என்னுடைய கதை.

கேட்டு வாங்கிப்போடும் கதை :  குழந்தையும் தெய்வமும் - வானம்பாடி 

எங்கள் தளத்தில் இன்று ஒரு புதிய எழுத்தாளர் அறிமுகம்! நமக்குதான் புதியவர்.  2005 லிருந்து பதிவுலகில் இருக்கும் வானம்பாடி  வானம்பாடி எனும் பெயரிலேயே வலைத்தளம் வைத்திருக்கிறார்.  சமீப காலங்களில் கீதா அக்கா பதிவுகளில் அவர் பெயர் பார்த்து, அவர் தளம் சென்று என்று அறிமுகமானவர்.  சமீப காலங்களில் நம் தளத்துக்கும்  வருகை தந்து கொண்டிருக்கும் அவரை வரவேற்கிறோம்.  கவிதையும் அழகாக எழுதுகிறார்.   இனி அவரிடமிருந்தும் அவ்வப்போது படைப்புகளை தொடர்ந்து எதிர்பார்க்கலாம் என்று நம்புகிறோம்.

குழந்தையும், தெய்வமும்  

வானம்பாடி 

எங்கள் வீட்டிற்கு  தினமும் சிறிது நேரம் வந்து செல்லத்  தொடங்கினாள்  தயஸ்ரீ.

ஏனோ அவளுக்கு என்னைப் பார்த்தால் மிகவும் பிடித்து விடுகிறது. என்னவர் என்னை ராஜிமா என்றே அன்புடன் அழைப்பார். அதைப்போலவே, என் பெயருடன்  அம்மா சேர்த்து "ராஜிம்மா " என்றே அழைக்கிறாள்! அம்மா என்று அவள் மழலையில் அழைக்கும் பொழுது நெகிழ்ந்து போகின்றேன். 

தயஸ்ரீயின் குடும்பம் இரண்டு  வருடங்களுக்கு  முன்பு தான் எங்கள் பக்கத்து வீட்டிற்கு குடி வந்தனர். நான் பள்ளிக்கு கிளம்பும் முன் டாடா சொல்ல வந்து விடுவாள். பின் பள்ளி முடிந்து வீடு திரும்பி கதவை திறக்கும் முன்பே வந்து காத்திருப்பாள். 'எனக்கும் கொஞ்சம் காபி குடுங்க ராஜிம்மா' என்பாள். எனக்கு பள்ளி விடுமுறை நாள் என்றால் அவளுக்குத்  தான் சந்தோஷமே! தோட்டத்து செடிகளுக்கு என்னுடன் நீரூற்றுவாள். குளித்து முடித்து  வந்து என்னிடமே தலை பின்னிக் கொள்ள வருவாள். ஞாயிற்றுக் கிழமை அவளுக்காகவே அடை செய்து விடுகிறேன் இப்பொழுதெல்லாம். அவள் அம்மா ஊட்டி விட்டால் அடம்  பிடிப்பாள். நான் ஊட்டினால் சமத்தாக சாப்பிட்டு விடுவாள். என் புடவை நுனி பிடித்து நடக்க நான் மயங்கித்தான் போகிறேன். 

அவளுக்கு  கதை கேட்கப் பிடிக்கும். குட்டி கதைகள் சொல்ல என்னவருக்கு மிகப் பிடிக்கும். வளமையான காடுகளும், அரண்மனைகளும், குடில்களும்,வயல்வெளிகளும் , கம்பீரமான யானைகளும், சிங்கங்களும், மானும், வேடனும் ,தந்திரக்கார நரியும், அணிலும், நன்றியுள்ள நாயும், பூனையும் , எளிமையான குடியானவரும், நல்ல பண்புடைய ராஜாக்களும், சித்திர குள்ளர்களும் , புத்திசாலியான ராணிகளும் , குறும்பு கொப்பளிக்கும் சிறுவர்களும் ,சிறுமியரும்  அவருடைய கதைகளில் அழகாய் பவனி வருவார்கள். இவரிடமும் ஒரு நல்ல கதை சொல்லி இருப்பார் என அறிந்ததில்லை. செல்லம் கொஞ்சி "எனக்கு கத  சொல்லுங்க மாமா" என்பாள். கதைகளில் சஞ்சரித்து , "ம்" கொட்டிக் கொண்டு, அவள் தூங்கிய பின் பூப்போல தாங்கி  அவள் வீட்டில் விட்டு வருவேன். 

போகிற போக்கில் விளையாட்டாய் , நாங்கள்  காணாத சந்தோஷத்தை வாரி இறைத்தாள் என்றே சொல்ல வேண்டும். வறண்டு கிடந்த இடத்தில் சிறு ஊற்றைப்  போல தோன்றி, பெருகி மகிழ்ச்சியாய் பொங்கினாள்  எங்கள் வாழ்வில். 

இவ்வளவு என்னிடம் எப்படி பழகினாள் என்று எனக்கே தெரியவில்லை. அவளுடைய அம்மா வித்யாவும்  மிகுந்த பாசமாகவே பேசுகிறாள். அவள் கருவுற்றிருப்பதால் என்னிடம் தயஸ்ரீ  இருப்பது பாதுகாப்பாகவும், தன்  வேலைகளை செய்து கொள்ள வசதியாகவும் இருப்பதாய் சொல்வாள். கடந்த ஆண்டு  பெரும் நோய்த்தொற்றின் பொருட்டு சில மாதங்கள் வீட்டில் தனியாக இருந்த பொழுது, மிகப்பெரிய ஆறுதலாக இருந்தாள். 

அவள் கேட்கும் கேள்விகளுக்கு சலிக்காமல் பதில் சொல்வார் என்னவர். "எதுக்கு உம்மாச்சி கண்ண குத்துது?" என்பாள் . "மேகம் எல்லாம் எங்க போகுது?" என்பாள். சில சமயம் ரொம்பவும் வானவியல் ஆராய்ச்சி  செய்து  , "ஏலியன் இங்க  வண்டுச்சுனா  ,  நா அது  கூட ஸ்பேஸ் கு போவேனே !" என்பாள். "எனக்கு இப்பவே ராஜிம்மா கூட ஸ்கூல் போகணும்" என்பாள். "என் பத்துடே  கு புடு டெஸ் வேணும்" என்பாள்.

எங்கள் மொழியும் கொஞ்சம் கொஞ்சம் பேசப் பழகிவிட்டாள். இறுகிய எங்கள் மனத்திற்கு இதமளித்தாள் .எனக்கும் அவருக்கும் சிறிது பயமாக கூட இருந்தது. நான் வீட்டின் வெறுமை பிடிக்காமல் பள்ளிக்கு வேலைக்கு செல்லத் தொடங்கி ஆறு வருடம் ஆகிறது. இப்பொழுது இருக்கும் வீடு சொந்த வீடென்றாலும், பள்ளி வெகு தூரம் செல்ல வேண்டியதாய் இருந்தது. 

என் பள்ளிக்கு அருகிலேயே நாங்கள் வீடு பார்த்துக் கொண்டிருந்தோம். வீடு கிடைத்தபாடில்லை. அவர் என்னைப்  பற்றி நன்கு அறிந்ததால் இப்பொழுது மும்முரமாக வீடு பார்க்கும் வேலையில் ஈடுபட்டுள்ளார் . குழந்தைக்காய் நான் ஏங்கிய ஏக்கம் கொஞ்சமில்லை. செல்லாத கோவிலில்லை , வேண்டாத தெய்வமில்லை. பார்க்காத வைத்தியமில்லை. உடலும், மனமும் ரணமாகி போனது தான்  மிச்சம். ஆகிவிட்டது வருடங்கள் பன்னிரண்டு. இதற்கிடையே, ஊருக்கு சென்றால், சொந்தங்களின் கேள்விகளும், தேவையில்லாத அறிவுரைகளும். எங்கும் விசேஷத்திற்கும் செல்வதில்லை. பிறரின் ஆதங்கமும், பரிகாசமும் என்னை மென்மேலும் வாட்டுவதால் சொந்த ஊருக்கு செல்வதையே நிறுத்தி  விட்டோம். எப்பொழுதாவது பெற்றோர் வந்து செல்வதுண்டு.

நேற்று தான் என்னவர் , பள்ளிக்கு பக்கத்திலேயே தனது நண்பரின் அபார்ட்மெண்ட் வீடு காலியாவதாக சொல்லியிருந்தார். இன்று தயஸ்ரீயின் நான்காவது  பிறந்தநாள் என்று அவள் அம்மா அழைத்திருக்கிறாள். இன்று காலை 10 மணிக்கு வீடு பார்க்கச் சென்றோம். இருவருக்கும் பிடித்திருந்ததால் அட்வான்ஸ் கொடுத்து விட்டும் வந்து விட்டோம் . 

மனம் தான் நிலை கொள்ளவில்லை. வரும் வழியில், "Grasp" துணிக்கடைக்கு சென்று  வெள்ளை நிறத்தில் மஞ்சள் பூக்கள் எம்பிராய்டரி  செய்த frock    ஒன்றும் அதற்கு ஏற்றார் போல அழகிய  கிலிப்சும் , ஹேர்பேண்ட்  வாங்கிக்  கொண்டோம். 

அன்பிற்கு எல்லை இல்லை தானே ...பகை தானே கொல்லும் ?  எனக்கோ அன்பென்னும்  அமுது சிறிது சிறிதாக மிகுந்து , நஞ்சாகி விடுமோ என பயமுறுத்துகிறது.

 இன்று  மாலை நடைபெற்ற பிறந்த நாள் விழாவில், அவள் அம்மாவிற்கு கேக் ஊட்டிவிட்டவள், என்ன நினைத்தாளோ, ஓடி வந்து என்னைக்  கட்டிப் பிடித்து, முத்தமிட்டு , எனக்கும் கேக் ஊட்டிவிட்டாள். அவள் தாத்தா, பாட்டி எங்களை ஆசிர்வதித்தனர்.


அவளிடம் விளையாடிவிட்டு ஒன்பது மணிக்கு மேல் தான் வீடு திரும்பினோம். இரவு  வெகு நேரம் உறக்கம் வரவில்லை.  

இந்த அன்பும் ரயில் சிநேகம் போலத்தானோ?, என மனதில் குமைந்து கொண்டு வெறுமனே கண் மூடி  படுத்திருந்தேன். கானல் நீராகி விடுமோ இதுவும் வீடு மாறினால்? என நினைத்து தவித்தேன். எத்தனையோ முறை,  என்னவரிடம்  ஒரு குழந்தையை தத்து எடுத்துக் கொள்வோம்  என்று சொல்லி இருக்கிறேன்.

மௌனம் மட்டுமே சாதிப்பார்.  ஆனால் இப்போது தூங்கியிருப்பார் என நினைத்த என்னவர் ,  எழுந்து உட்கார்ந்து பேசத்  தொடங்கினார்.  இதோ இந்த நொடி,விடியப்போகும் இவ்வேளையில், முதல் முறையாக  ஒரு குழந்தையை  தத்தெடுத்துக் கொள்வோமா ? என அவரே சொல்ல கேட்கிறேன். சொல்ல வார்த்தை வரவில்லை.நெகிழ்ச்சியில் கண்ணீர் மட்டுமே வருகிறது . இந்த வீட்டிலேயே இருப்போம். தயஸ்ரீக்கு துணையாய் இன்னொரு குழந்தையை  உன் விருப்பம் போல வளர்ப்போம் என்றும் சொல்கிறார் ! 

ஆழமாக கண்கள் நோக்கி, தோள் சாய்ந்து கொள்கிறேன்! ஆதுரமாய் தலை கோதி புன்னகைக்கிறார் நிஜமாய்!  இன்று குழந்தையும், தெய்வமும் ஒன்றாக கூடி என்னிடம் வந்தது போல் உணர்ந்தேன். கரைப்பார் கரைத்தால் கல்லும் கரையும் என்று கேள்விப்பட்டுள்ளேன்.இன்று கண்ணார கண்டு விட்டேன். கரைத்தே விட்டாள் அவர் மனதை! என்னவரின்  மனதை இளக்கி, தெளிய வைத்த தயஸ்ரீக்கு நன்றி சொல்ல வேண்டும் நாளை! 

= = = =

Tuesday, February 02, 2021

எனக்குள் ஒரு தேடல் உருவாக்கிய பாரதியாரின் கவிதை


நல்லதோர் வீணை செய்தே - அதை
நலங்கெடப் புழுதியில் எறிவதுண்டோ?
சொல்லடி சிவசக்தி - எனைச்
சுடர்மிகும் அறிவுடன் படைத்துவிட்டாய்.
வல்லமை தாராயோ, - இந்த
மாநிலம் பயனுற வாழ்வதற்கே?
சொல்லடி, சிவசக்தி - நிலச்
சுமையென வாழ்ந்திடப் புரிகுவையோ?

விசையுறு பந்தினைப்போல் - உள்ளம்
வேண்டிய படிசெலும் உடல்கேட்டேன்,
நசையறு மனங்கேட்டேன் - நித்தம்
நவமெனச் சுடர்தரும் உயிர்கேட்டேன்,
தசையினைத் தீசுடினும் - சிவ
சக்தியைப் பாடும்நல் அகங்கேட்டேன்,
அசைவறு மதிகேட்டேன் - இவை
அருள்வதில் உனக்கெதுந் தடையுளதோ?

Thursday, January 14, 2021

திருப்பாவை பாசுரம் 30



வங்கக் கடல் கடைந்த மாதவனைக் கேசவனை
     திங்கள் திருமுகத்துச் சேயிழையார் சென்று இறைஞ்சி
அங்கு அப்பறை கொண்ட ஆற்றை அணிபுதுவைப்
     பைங்கமலத் தண்தெரியல் பட்டர் பிரான் கோதை சொன்ன
சங்கத் தமிழ் மாலை முப்பதும் தப்பாமே
     இங்கு இப்பரிசு உறைப்பார் ஈரிரண்டு மால் வரைத் தோள்
செங்கன் திருமுகத்துச் செல்வத் திருமாலால்
     எங்கும் திருவருள் பெற்று இன்புறுவர் எம்பாவாய்

Wednesday, January 13, 2021

திருப்பாவை பாசுரம் 29



சிற்றஞ் சிறு காலே வந்துன்னைச் சேவித்து உன்
     பொற்றாமரை அடியே போற்றும் பொருள் கேளாய்!
பெற்றம் மேய்த்து உண்ணும் குலத்தில் பிறந்து நீ
     குற்றேவல் எங்களை கொள்ளாமல் போகாது
இற்றைப் பறை கொள்வான் அன்று காண் கோவிந்தா!
     எற்றைக்கும் ஏழேழ் பிறவிக்கும் உன்தன்னோடு
உற்றோமே யாவோம் உனக்கே நாம் ஆட்செய்வோம்
     மற்றை நம் காமங்கள் மாற்று ஏல் ஓர் எம்பாவாய்

Tuesday, January 12, 2021

திருப்பாவை பாசுரம் 28



கறவைகள் பின்சென்று கானம் சேர்ந்து உண்போம்
     அறிவொன்றும் இல்லாத ஆய்க்குலத்து உன்தன்னைப்
பிறவி பெருந்தனை புண்ணியம் யாம் உடையோம்
     குறைவொன்றும் இல்லாத கோவிந்தா, உன்தன்னோடு
உறவேல் நமக்கு இங்கு ஒழிக்க ஒழியாது
     அறியாத பிள்ளைகளோம் அன்பினால் உன்தன்னைச்
சிறுபேர் அழைத்தனவும் சீறி அருளாதே
     இறைவா! நீ தாராய் பறை ஏல் ஓர் எம்பாவாய்

Monday, January 11, 2021

திருப்பாவை பாசுரம் 27




கூடாரை வெல்லும் சீர்க் கோவிந்தா உன் தன்னைப்
     பாடி பறை கொண்டு யாம் பெறு சம்மானம்
நாடு புகளும் பரிசினால் நன்றாக
     சூடகமே தோள் வளையே தோடே செவிப்பூவே
பாடகமே என்றனைய பல்கலனும் யாம் அணிவோம்
     ஆடை உடுப்போம் அதன் பின்னே பாற்சோறு
மூட நெய் பெய்து முழங்கை வழிவார
     கூடியிருந்து குளிர்ந்து ஏல் ஓர் எம்பாவாய்

Sunday, January 10, 2021

திருப்பாவை பாசுரம் 26



மாலே! மணிவண்ணா மார்கழி நீராடுவான்
     மேலையார் செய்வனகள் வேண்டுவன கேட்டியேல்
ஞாலத்தையெல்லாம் நடுங்க முரல்வன
     பாலன்ன வண்ணத்துன் பாஞ்சன்னியமே
போல்வன சங்கங்கள் போய்ப்பாடு உடையனவே
     சாலப்பெரும் பறையே பல்லாண்டு இசைப்பாரே
கோல விளக்கே கொடியே விதானமே
     ஆலின் இலையாய் அருள் ஏல் ஓர் எம்பாவாய்

Saturday, January 09, 2021

திருப்பாவை பாசுரம் 25


ஒருத்தி மகனாய்ப் பிறந்து ஓர் இரவில்
     ஒருத்தி மகனாய் ஒளித்து வளர
தரிக்கிலான் ஆகித்தான் தீங்கு நினைத்த
     கருத்தைப் பிழைப்பித்துக் கஞ்சன் வயிற்றில்
நெருப்பென்ன நின்ற நெடுமாலே உன்னை
     அருத்தித்து வந்தொம் பறை தருதியாகில்
திருத்தக்க செல்வமும் சேவகமும் யாம்பாடி
     வருத்தமும் தீர்ந்து மகிழ்ந்து ஏல் ஓர் எம்பாவாய்

Friday, January 08, 2021

திருப்பாவை பாசுரம் 24



அன்று இவ்வுலகம் அளந்தாய் அடிபோற்றி

     சென்றங்குத் தென்னிலங்கை செற்றாய் திறல் போற்றி
பொன்றச் சகடமுதைத்தாய் புகழ் போற்றி
     கன்று குணிலா வெறிந்தாய் கழல் போற்றி
குன்று குடையா வெடுத்தாய் குணம் போற்றி
     வென்று பகை கெடுக்கும் நின்கையில் வேல் போற்றி
என்றென்றுன் சேவகமே ஏத்திப் பறை கொள்வான்
இன்றுயாம் வந்தோம் இரங்கு ஏல் ஓர் எம்பாவாய் 

Thursday, January 07, 2021

திருப்பாவை பாசுரம் 23



மாரிமலை முழைஞ்சில் மன்னிக் கிடந்து உறங்கும்
     சீரிய சிங்கம் அறிவுற்றுத் தீவிழித்து
வேரி மயிர்ப்பொங்க எப்பாடும் பேர்ந்து உதறி
     மூரி நிமிர்ந்து முழங்கிப் புறப்பட்டுப்
போதருமா போலே நீ பூவைப் பூவண்ணா உன்
     கோயில் நின்று இங்ஙனே போந்தருளி, கோப்புடைய
சீரிய சிங்காசனத்திலிருந்து, யாம் வந்த
     காரியம் ஆராய்ந்து அருள் ஏல் ஓர் எம்பாவாய்

Wednesday, January 06, 2021

திருப்பாவை பாசுரம் 22



அங்கண் மா ஞாலத்து அரசர் அபிமான
     பங்கமாய் வந்து நின் பள்ளிக் கட்டிற்கீழே
சங்கமிருப்பார் போல் வந்து தலைப்பெய்தோம்
     கிண்கிணி வாய்ச் செய்த தாமரைப் பூப்போலே
செங்கண் சிறுச் சிறிதே எம்மேல் விழியாவோ
     திங்களும் ஆதித்தியனும் எழுந்தாற்போல்
அங்கண் இரண்டுங்கொண்டு எங்கள் மேல் நோக்குதியேல்
     எங்கள் மேல் சாபம் இழிந்து ஏல் ஓர் எம்பாவாய்

Tuesday, January 05, 2021

திருப்பாவை பாசுரம் 21



ஏற்ற கலங்கள் எதிர்பொங்கி மீதளிப்ப
     மாற்றாதே பால் சொரியும் வள்ளல் பெரும் பசுக்கள்
ஆற்றப் படைத்தான் மகனே! அறிவுறாய்
     ஊற்றமுடையாய்! பெரியாய் உலகினில்
தோற்றமாய் நின்ற சுடரே! துயிலெழாய்
     மாற்றார் உனக்கு வலிதொலைந்து உன் வாசற்கண்
ஆற்றாது வந்து உன் அடி பணியுமாபோலே
     போற்றியாம் வந்தோம் புகழ்ந்து ஏல் ஓர் எம்பாவாய்

Monday, January 04, 2021

திருப்பாவை பாசுரம் 20











முப்பத்து மூவர் அமரர்க்கு முன் சென்று
     கப்பம் தவிர்க்கும் கலியே! துயிலெழாய்
செப்பமுடையாய், திறலுடையாய் செற்றார்க்கு
     வெப்பம் கொடுக்கும் விமலா! துயிலெழாய்
செப்பன்ன, மென்முலை செவ்வாய் சிறுமருங்குல்
     நப்பின்னை நங்காய்! திருவே! துயிலெழாய்
உக்கமும் தட்டொளியும் தந்துன் மணாளனை
     இப்போதே எம்மை நீராட்டு ஏல் ஓர் எம்பாவாய்

Sunday, January 03, 2021

திருப்பாவை பாசுரம் 19


குத்து விளக்கெரியக் கோட்டுக்கால் கட்டில் மேல்
     மெத்தென்ற பஞ்ச சயனத்தின் மேலேறி
கொத்து அலர் பூங்குழல் நப்பின்னை கொங்கைமேல்
     வைத்துக் கிடந்த மலர் மார்பா! வாய் திறவாய்
மைத்தடங் கண்ணினாய் நீயுன் மணாளனை
     எத்தனை போதும் துயில் எழ ஒட்டாய் காண்
எத்தனையேலும் பிரிவாற்ற கில்லையால்
     தத்துவம் அன்று தகவு ஏல் ஓர் எம்பாவாய்

Saturday, January 02, 2021

திருப்பாவை பாசுரம் 18

 


உந்து மதகளிற்றன் ஓடாத தோள்வலியன்
நந்தகோபாலன் மருமகளே! நப்பின்னாய்
கந்தம் கமழும் குழலி கடை திறவாய்
வந்தெங்கும் கோழி அழைத்தன காண் மாதவிப்
பந்தல் மேல் பல்கால் குயிலினங்கள் கூவின காண்
பந்தார் விரலி! உன் மைத்துனன் பேர்பாட
செந்தாமரைக் கையால் சீரார் வளையொலிப்ப
வந்து திறவாய் மகிழ்ந்தேலோர் எம்பாவாய்.

Friday, January 01, 2021

திருப்பாவை பாசுரம் 17





அம்பரமே தண்ணீரே சோறே அறஞ்செய்யும்
     எம்பெருமான் நந்தகோபாலா எழுந்திராய்
கொம்பனார்க்கு எல்லாம் கொழுந்தே குல விளக்கே
     எம்பெருமாட்டி யசோதாய் அறிவுறாய்
அம்பரம் ஊடு அறுத்து ஓங்கி உலகளந்த
     உம்பர் கோமானே! உறங்காது எழுந்திராய்
செம்பொற் கழலடிச் செல்வா பலதேவா
     உம்பியும் நீயும் உறங்கேல் ஓர் எம்பாவாய்