நித்தம் தரிசிப்பேன்
கோடானு கோடி காதலிகளை!
எனக்கு சிறகுகள் வாய்த்ததே,
அதற்குத்தான் என்பேன்.
அவர்களை சுற்றி சுற்றி வருவேன்.
பாசமாய் வருடிச் செல்வேன்.
ஒருத்தியிடம் கூட சொன்னதில்லை,
நான் நேசித்த சங்கதியினை.
நிராகரிப்பை நிராகரிப்பவன் நான்.
ஒருவேளை என்னை நிராகரித்தால்,
நிராயுதபாணி ஆவேனல்லவா?
நிறங்களை சுமக்கும் தேவதைகள்,
என் அருமை காதலியர்.
நிறமில்லாத நான் எப்படி உரைப்பேன்?
என் வானவில் காதலை?
ஒற்றைக் காலிலாவது நிற்கின்றனர்,
என் அழகு நாயகியர்.
நில்லாதவன் நான் என்பதால்-
காதலை
சொல்லாதவன் என ஆனேன்.
ஒவ்வொருத்தியிடமும் தனித்துவமாய்,
ஒவ்வொரு ஸ்வாசம், ஒவ்வொரு வாசம்!
என் ஸ்வாசத்தில் ஏற்றிச்செல்வேன்,
என்னவள்களின் பூ வாசம்.
மெல்லியலாள் என மனதில் கொஞ்சுவேன்!
மெல்லிசை காதினில் ஓதுவேன்!
சில சமயம் வல்லியனாகி,
அவர்களை ஆட்டிப்படைப்பேன்.
பின் அதற்காக அழுது வருந்துவேன்.
என்னை புயலாய்ப் பார்க்க,
எனக்கே பிடிப்பதில்லை.
ஏனென்றால் நான் பூங்காற்று.
பூக்களின் காதலன்!