வாழையடி வாழை.
வாணி பாலை அடுப்பில் வைத்துவிட்டு, எஃப். எம். ஐ உயிர்ப்பித்தாள். "மங்களம் அருள்வாள் மதுரைக்கு அரசி" பாடலை சீர்காழி கோவிந்தராஜன் அவர்கள் மனமுருக பாடிக் கொண்டிருந்தார். வாணியும் மெல்லிய குரலில் அவருடன் "அங்கயற்கண்ணி, அன்பு மீனாட்சி" என தொடரலானாள். மீனாட்சியம்மா எல்லாரும் நல்லா இருக்கணும் என மனதிற்குள் வேண்டிக்கொண்டு, பர பர என சமையல் வேலை ஆரம்பித்தாள். என்ன டல்லா இருக்கே?, என்றபடியே ஶ்ரீராம் வந்தான். அவளுக்கு என்ன என்றாலும், முகத்தை பார்த்தவுடன் கண்டுபிடித்துவிடுவான். ரொம்ப அசதியாவும், கைவலியாவும் இருக்கு என்றாள். உன்னை யார் எல்லாத்தையும் இழுத்துப்போட்டுக்க சொன்னா? என கடிந்து கொண்டான். மாமி தான், வீடு காலியாரப்பவே வண்ணம் பூசும் வேலை செய்யலான்னு சொன்னாங்க, என சொல்லி முடிக்கும் முன்பே, இந்த வீட்ல யார் என்ன சொன்னாலும் கேளு, கஷ்டப்படு. ஆஃபிஸில் ஆடிட்டிங் நேரத்தில், ஏன் இப்படி படுத்தரே? எங்கிட்ட ஒரு வார்த்தை கேட்டியா? என கத்திவிட்டு தேநீர் கோப்பையுடன், பேப்பர் படிக்க போய்விட்டான். சிறிது நேரம் கழித்து வந்து, அவங்கபாட்டுக்கு ஊருக்கு போயாச்சு என ஆரம்பித்தான். சரி இப்போ மாமியை ஒன்னும் சொல்லாதீங்க, அவங்களுக்கு பெயிண்ட் ஒத்துக்கலை. அவங்க சொல்றதிலும் நியாயம் இருக்குதானே. அப்புறம் எப்போ வீட்டை சீர் செய்யறது? என சமாதானப் படுத்தினாள் வாணி. சரி, சரி, நீ ரொம்ப ஸ்ட்ரெயின் பண்ணிக்கதே. முடிஞ்சா லீவ் போட்டுடு என ஆதரவாய் பேசினான்.. இட்லியும் சாம்பாரும் சாப்பிட்டுவிட்டு, மதியம் கேன்டீனில் சாப்பிடுவதாக சொல்லிவிட்டு 8 மணிக்கே கிளம்பிவிட்டான். இதனிடையே பிள்ளைகள் இருவரும் எழுந்து வந்து, குளித்து ,சாப்பிட்டு முடித்தனர். அவள் எதைப் பற்றியும் நினைக்க வேண்டாம் என்றாலும் ஏதாவது ஒன்று மனதில் ஓடுகிறது.யோசித்துவிட்டு ஆபீஸுக்கு லீவ் சொன்னாள். மதியத்திற்கும் சேர்த்தே சமைத்திருந்தாள். இரு பிள்ளைகளையும் பள்ளிக்கு (ரூமிற்கு ஒன்லைன் கிளாஸுக்கு )அனுப்பிவிட்டு, குளித்து முடித்து , பூஜை செய்துவிட்டு, கடிகாரத்தைப் பார்த்தாள் . சரியாக 9 மணி. சாப்பிடவும் தோன்றவில்லை. கீழே சென்று உட்காரலாம் என வந்துவிட்டாள்.
இரண்டு வாரங்களாக அலுவலகத்திலும் வேலை பளு அதிகம். டைப் அடித்து, அடித்து விரல்களில் தொடங்கி கழுத்து வரை வலி. தன் தோள் கழண்டு விழுந்து விடுமோ எனவும் எண்ணினாள். வீட்டிலும் ஒன்றன் பின்னால் இன்னொன்று என நிலை கொள்ளாமல் வேலை. சரி சிறிது நேரம் நியூஸ், பேஸ்புக் பார்த்து ஆசுவாசப்படுத்திக் கொள்ளலாம் என்றால், பிரஷர் ஏறுவது தான் மிஞ்சுகிறது. வீட்டினை சீர் செய்து நெடுநாட்கள் ஆகிவிட்டது. நாத்தனாரின் திருமணத்திற்கு வண்ணம் பூசியது. பதினைந்து வருடங்களுக்கு மேல் இருக்கும். வீட்டின் மேல் போர்ஷனில் குடியிருந்தவர்கள் வேலை மாற்றலாகி , சென்ற மாதம் வீட்டைக் காலி செய்தனர். சிறிது நாள் மேல் போர்ஷனில் தங்கி , கீழே சீர் செய்துவிட்டு, பிறகு மேலேயும் சீர் செய்து புதிதாய் குடிவைக்கலாம் என்று மாமி யோசனை கூறினார்கள்.. ஆனால் வீட்டில் யாருக்கும் இதில் இஷ்டம் இல்லை. பிறகு பார்த்துக் கொள்ளலாம் என்று விட்டால், இப்பொழுது இருக்கும் நிலைமையில், வண்ணம் பூச ஆள் கிடைப்பது அரிது என, கிடைத்த போதே, காண்ட்ராக்ட் பேசி விட்டாள். பெயிண்ட் வாசனை அலர்ஜியாகி, மாமாவும், மாமியும் பெண் வீட்டிற்கு சென்று விட்டனர். நாத்தனார் சுதாவும் அவளது அப்பா, அம்மாவைப் பார்த்தே ஒரு வருடம் ஆகிவிட்டது, சில மாதம் அவள் வீட்டிலிலேயே இருக்கட்டும் என கெஞ்சாத குறையாக கேட்க , சென்ற வாரம் தான் ஸ்ரீராம் தன் தாய் தந்தையை பத்திரமாக தங்கை வீட்டில் விட்டு வந்தான். யானை தன் தலையில் தானே மண்ணை போட்டுக்கொண்டது போல அனைத்தும் இப்பொழுது வாணியின் தலையில். அலுவலகம் விட்டு வீடு வந்தால், பிள்ளைகளும், கணவரும் முறைக்கின்றனர். எல்லோரைப் போல தனக்கும் தான் பெயிண்ட் வாசனைக்கு தலையை வலிக்கிறது. அவள் எங்கே செல்வாள்? இதனால் மன அழுத்தம் அதிகமாகிவிட்டது. இதோ இன்னும் சிறிது நேரத்தில் சுவர்களுக்கு வண்ணம் பூச பெயிண்டர்கள் வந்து விடுவார்கள். தினமும் அவர்களிடம் போனில் தான் பேசுகிறாள். இன்றாவது பக்கத்திலிருந்து பார்க்க வேண்டும். எங்கெங்கு என்னென்ன நிறம் பூசலாம் என்ற ஆலோசனை கூட யாரும் சொல்லவில்லை. போனால் போகிறதென்று மனதை தேற்றிக்கொண்டு, மாமிக்கு இப்பொழுது எப்படி இருக்கிறது என கேட்கலாம் என தொலைபேசினாள். இப்பொழுது தேவலை என்றும், மாமாவிற்கு லேசாக ஜலதோஷம் என்றும் சொன்னாள். பெயிண்ட் அடிக்கும் பொழுதே, சமயலறையில், நமக்கு வசதியாக கப்போர்டுகள், மற்றும் சில மர வேலைப்பாடுகளையும் செய்துவிட்டால் என்ன ? என கேட்கின்றாள் மாமி. இப்பொழுதே தலை சுற்றுகிறது. உட் ஒர்க்குக்கு இன்னும் எவ்வளவு செலவாகுமோ ? அப்பனே, முருகா இது என்ன சோதனை? என எண்ணியவாறே தனது மகள் வீணாவின் அறையை ஒழுங்கு படுத்தினாள். அவளது அறைக்கு மட்டும் தான் வண்ணம் பூசி முடித்துள்ளது.
வீட்டு வேலைக்கு வரும் வசந்தாவின் பெண்ணிற்கு திருமணம் நிச்சயமாகியுள்ளது. 25 வருடங்களாய் வேலை செய்து வருகிறாள். முன்பணமாக 30,000 தேவைப்படும். கொஞ்சம் உதவுங்கள், சிறிது சிறிதாக கொடுத்துவிடுகிறேன் என்கிறாள். சேர்த்து வைத்த பணம் கொஞ்சம் தனியாக எடுத்து வைத்திருக்கிறாள். அதைத்தான் அவளிடம் தரவேண்டும். அஞ்சறைப்பெட்டியில் 100, 200 என சேர்த்து வைத்தது, யாருக்கும் தெரியாமல்...மற்ற வங்கி சேமிப்பில் இருந்து எடுத்தால் ஸ்ரீராம் என்னும் தன் அன்புக் கணவன் கோபிப்பான். மாமி ஒன்றும் சொல்ல மாட்டாள். வசந்தா தானே எல்லா வீட்டு வேலைகளையும் கச்சிதமாக செய்து தருகிறாள். வசந்தா போல ஒருத்தி சுதாவுக்கு கிடைத்தால் தான் நிம்மதியாய் இருப்பேன் என்பாள். வீணாவும், விஷ்ணுவும் பிறந்த பொழுது மாமாவின் வேலை பொருட்டு , மாமாவும், மாமியும் சென்னையில் வசித்து வந்தனர். வாணியின் அப்பாவும், அம்மாவும் பிள்ளைகளை பார்த்துக்கொள்ள வந்து செல்வர். அம்மா அடிக்கடி சொல்வாள், வசந்தா நல்ல குணமானவள், செய்யும் வேலையும் நேர்த்தி, எப்பவும் அவளை கூடவே வெச்சிக்கோ என்று. அப்பொழுதெல்லாம் 7.30 மணிக்கெல்லாம் வந்து தனக்கு ஒத்தாசையாய் எல்லா வேலைகளையும் செய்து தருவாள். பிள்ளைகள் பள்ளி விட்டு வரும் முன்னரே 3.30 மணிக்கெல்லாம் வந்து அவர்களுக்கு பால் கலந்து கொடுத்து விடுவாள். அவளிடம் ஒரு சாவி கொடுத்து வைத்திருப்பாள். அக்கம் பக்கம் உள்ளவர்கள், இப்படி சாவி எல்லாம் கொடுக்கிறாய், உஷாராக இரு என எச்சரிப்பர். வாணி அதை எல்லாம் காதில் கூட போட்டுக்கொள்ள மாட்டாள். வசந்தாவின் முகம் கலையான, அன்பான முகம். அவ்வளவு வாஞ்சை தென்படும் அவளுடைய பேச்சில். சொன்ன வேலையை மட்டும் செய்யாமல், நேரமிருந்தால் வீட்டை சுத்தம் செய்து தருவாள். எங்காவது மேஜை மேல், ட்ரெஸ்ஸிங் டேபிளில், வாணி தனது மோதிரத்தை மறந்து வைத்தால் கூட, அக்கறையாய் எடுத்து வந்து தருவாள். தான் வேலைக்கு வரவில்லை என்றாலும் முன் கூட்டியே சொல்லிவிடுவாள். மனம் பழைய நினைவுகளை அசை போட்டது. கதவு திறக்கும் சப்தம் கேட்டு திரும்பினாள் . இன்னிக்கு ஆபீஸ் போல? உடம்பு சரியில்லையா உனக்கு? என கேட்டவாறே வந்து தலையை தொட்டு பார்த்தாள் வசந்தா. இல்லை, அசதியாக இருந்தது, அதான் போகலை என்றாள் வாணி. சரி நான் மேலே போயி காபி போட்டு கொண்டு வரட்டா ? எனக் கேட்டு, மேலே சென்று சுட சுட காபியுடன் வந்தாள்.
வீடு முழுதும் கூட்டி , துணி துவைத்து, பாத்திரமும் தேய்த்து விட்டு மெல்ல இவள் பக்கம் வந்து அமர்ந்தாள். வீணாவும் கிளாஸ் பிரேக்கில் கீழே வந்தாள். வசந்தாக்கா, ராணி அக்காவுக்கு எப்போ கல்யாணம்? அம்மா சொன்னாங்க , ரொம்ப சந்தோஷம் கா ... என்றாள், பதினொன்றாம் வகுப்பு படிக்கும் வீணா. ஆமாம் பாப்பா, ராணிக்கு வர்ற ஆணி மாசத்துல கல்யாணம். நல்ல இடமா அமைஞ்சிருக்குமா. தூரத்து சொந்தம் தான். நல்ல மனுஷங்க. ஒன்னும் சீர் ரொம்ப எதிர்பாக்கலை. மாப்பிளை போலீஸ் வேலைல இருக்காரும்மா. நல்லா விசாரிச்சும் பார்த்துட்டோம், ரொம்ப கண்ணியம்னு பேர் இருக்கும்மா. இனிமேல தான் எல்லா வேலையும் என்றாள். எப்போ உனக்கு பணம் தேவைப்படும்? என்றாள் வாணி. அடுத்த மாசம் குடுக்க முடியுமா வாணிம்மா உன்னால? எனக் கேட்டாள். பின் அவளே, உன்னால முடிஞ்சப்ப குடும்மா, இன்னும் 4 மாசம் இருக்கில்ல...நான் இப்போவே உங்கிட்ட சொல்லி வெச்சிருக்கேன்.எவ்ளோ சிக்கனமா கணக்கு போட்டு பாத்தாலும் ஒரு 30,000 கொறயுது. என் வீட்டுக்காரரும் கொஞ்சம் ஏற்பாடு செய்றேன்னு சொல்லிருக்காரும்மா என்றாள். சரிம்மா நான் எதித்த வீட்டு வேலைக்கு போகணும். வர்றேம்மா என்றாள். போகும் போது, அப்டியே இங்க வந்துட்டு போ வசந்தா , என அனுப்பிவைத்தான் வாணி.
வீணா , வாணியிடம் வந்து அமர்ந்து, என்னம்மா ஆகுது உனக்கு? எப்பவும் லீவே போடா மாட்டே? என் மேல கோவமா? சாரி மா என்றாள். வாணியின் கைகளை மெல்ல நீவிவிட்டாள். சரியா போயிடும் டீ ...நீ கவலைப்படாதே என்றாள். அம்மா எனக்கு ஒன்னு தோணுதும்மா...வசந்தா அக்காவுக்கு நாம எதாவது செய்யணும்மா...அதத்தான் நானும் யோசிக்கிறேன் என்றால் வாணி. அம்மா, நீங்க இப்போ கொடுக்க போறது கடன். நான் அதப்பத்தி பேசல. யாரோ ஒரு அறிவி ஜீவி நேத்து சொல்லிட்டிருந்தான் 5000,அல்லது 10000 ரூபாய்க்குள்ள ஓரளவுக்கு நல்லா கல்யாணம் பண்ணிடலாமாம். எந்த காலத்துல இருக்காங்க இவங்கல்லாம்? ஒரு ஹோட்டலுக்கு குடும்பத்தோட போயி சாப்டுட்டு வந்தாவே, ஆயிரக்கணக்கில் ஆகுது என புலம்பினாள் வாணி.அம்மா, டாபிக்கை விட்டு வெளிய போகாதே.ரொம்ப நியூஸ், facebook பாக்கறே , அதனால தான் உனக்கு இப்படி டென்ஷன் ஆகுது என்றாள் வீணா. இன்னும் என்னென்ன இழிவா பேசறாங்க இவனைச் சேர்ந்தவங்க? இப்படிபேசினா நாக்குல சரஸ்வதி எப்படி தங்குவா? என மீண்டும் மனது ஆறாமல் தொடர்ந்தாள் வாணி. அதைக்கேட்ட வீணா , நோ பாலிடிக்ஸ். இப்போ வசந்தா அக்கா டாபிக் வாம்மா...அவங்களுக்கு எப்பவும் உதவ கொஞ்சம் பணம் அவங்க அக்கௌன்ட்ல டெபாசிட் பண்ணுங்களேன் என்றாள். நானும் , நீங்க, அப்பா, தாத்தா, பாட்டி தர்ற பணமெல்லாம் சேத்து வெச்சுட்டே வர்றேன். விஷ்ணுவும் அவனோட பணத்தை சேவ் பன்றான், என சொல்லிக்கொண்டிருக்கும் பொழுதே அவனும் "குக்கூ...குக்கூ..." என பாட்டு பாடிக் கொண்டே வந்தான். ஏதோ பெருசா பிளான் பண்றீங்க போல என்றான். அவனிடம் விளக்கிய பின் சந்தோஷமாய் ஒத்துக்கொண்டான். நம்ம வசந்தா அக்காவுக்கு தரலைன்னா தான் தப்பு. எனக்கு அம்மை போட்டிருந்தப்ப, உனக்கு ஆபீஸ் லீவு போட முடியலை.எப்பவும் மறக்காது, ஒரு வாரம் அவ்ளோ நல்லா பாத்துக்கிட்டாங்க என தன்னை சிறு வயதில் பாத்துக்கொண்டதை நினைவு கூர்ந்தான்.. நானும் கொஞ்சம் சேத்து வெச்சிருக்கேன் என்றாள் வாணி. மூன்று பேரும் சேர்ந்து தாங்கள் சேர்த்து வைத்ததை எண்ணினர். கணிசமான தொகையே இருந்தது. சரி அப்பா வந்ததும் நம்ம எல்லாரும் பேசி, கடன் குடுக்க ரெடி பண்லாம். வலது கை கொடுக்கறது, இடது கைக்கு தெரியாம, வசந்தாவை கூட்டிட்டு போய் எடுக்க முடியாதபடிக்கு, வட்டியும் சேர்வது போல டெபாசிட் செய்துட்டு வந்துடலாம். என்ன நான் சொல்றது என்றாள் மகளிடம் கண் சிமிட்டியபடி. வீணாவும், விஷ்ணுவும், கையை உயர்த்தி சரி என சைகை காண்பித்தார்கள். மறந்தே போச்சு, பெய்ண்ட்டர்கள் அப்போவே வந்துட்டாங்க. கிச்சன்ல என்ன கலர் அடிச்சிட்டு இருக்காங்கன்னு போயி பார்த்துட்டு ஆன்லைன் கிளாஸ் போங்க என்றாள். நான், வசந்தா வர்றத்துக்குள்ள மேல போயி சாப்டுட்டு, உங்களுக்கும், வேலை செய்யறவங்களுக்கு டீ போட்டு கொண்டு வர்றேன் என்றாள். தன் பிள்ளைகளை நல்லபடி தான் வளர்த்திருக்கிறோம்.வாழையடி வாழையாய், வாழட்டும், வாழவைக்கட்டும் என மானசீகமாக ஆசிர்வதித்து, அவ்விடம் விட்டு நகர்ந்தாள்.