Thursday, July 01, 2021

ஊர் திரும்பல்

கயல்விழிகள் காணாது,

முயல்களும் வியந்தது.

பூம்பாதம் பாவாமல்,

புல்வெளியும் தேடியது.

மென்கைகள் தடவாது,

மலர்களும் வாடியது.

ஆரஞ்சும், எலுமிச்சையும்,

தங்களுக்குள் பேசிக்கொண்டது

தங்களை உருட்டி விளையாடும்,

அந்த  சிரிப்பழகி  எங்கேயென்று?

ஊஞ்சலங்கே காற்றிலாட,

தென்றல் வந்து சொன்னது,

சாரா குட்டி சாண்டியாகோ விட்டு,

தன் பாட்டி வீடு சென்றாள் என்று!

முயலும், புல்லும், மலரும்,

முகம் மலர்ந்து துள்ளியது,

எப்போதும் அவள் கைகள்,

உயர்த்திக் காட்டும் விமானம் கண்டு!

ஆரஞ்சும், எலுமிச்சையும் பூரித்தது,

பழம் நழுவி பாலில் விழுந்ததென!

வானவில்லும் வந்தங்கு,

வண்ணமாய் கையசைக்க,

அன்பின் ஊற்று விழியில் வழிய,

தோழி எரிகாவும்  வழியனுப்பினாள்.

வேடந்தாங்கல் நீங்கும் பறவையாய் ,

தந்தையின் அரவணைப்பில்!

அம்மாவின் கண்மலரும் நீரிலாட,

அவள் மடியிலிவளை பூவாய் தாங்க,

கடற்கரையின் அலை போல,

சுருள் கேசம் அலை பாய,

வான ஊர்தி ஏறி வந்தாள்!

சங்கீத ராகம் பாடி,

வேடந்தாங்கல் விட்டு,

தன்னிடம் சேரும் பறவையாய்,

கைகளில் எல்மோ பொம்மை தாங்கி,

வீடெண்ணும் கூடு வந்தாள்,

தன் அண்ணனின் கை கோ்த்து!

கோடையில் வாடி நிற்கும்,

தாத்தாவிற்கும், பாட்டிக்கும்,

வசந்தத்தை கொண்டு வந்தாள்!