அழகியதாய் மலைகளை கடந்து,
ஊரை நோக்கி ஊர்ந்துகொண்டிருந்தது,
எங்கள் மகிழுந்து மகிழ்ச்சியில்!
காலை கதிர், பசுமையில் படர்ந்து,
பட்டு போல் ஜொலித்தன வயல்கள்!
வானுயர காற்றாடிகளை ரசித்தபடி,
நண்டு சிண்டுகளாய் பிள்ளைகள்!
இளையராஜாவின் இசையை சுவாசித்தபடி,
என்னவரும், நானும் மற்ற இருவரும்.
பிள்ளைகளின் பொருட்டு ,
எப்பொழுதும் மிதமான வேகத்தில் ஓட்டுபவர்,
அன்றும் விவேகமாகவே ஓட்டினார்.
ஊர்தி, இவர் கைகளில், கம்பீர நடையுடன்,
ராஜபாட்டையில் சென்றுகொண்டிருந்தது .
நண்பர்கள் இருவரும் நிகழ்ந்தவைகளை,
நகைச்சுவையாய் உரைத்திட,
நானும் தோழியும் சிரித்திட்டோம் .
மனதிற்கினியன , கண்ணுக்கினியன , காதிற்கினியவை ...
கண்ணிமைக்கும் நேரத்தில், மின்னலென,
மதியற்று, மிகவேகமாய் பாய்ந்தது,
தலைக்கவசம் அணியாத முதியவரின் ,
சின்னஞ்சிறு வாகனம்.
யோசிக்காமல் பின்னால் பார்த்தபடியே,
அவர் செய்த பெரும் பிழை.
உடன் எங்கள் ஊர்தியை நிறுத்தியும்,
பயனற்றுப்போய் அவர் வந்து இடித்திட்டார்.
நெற்றியில் பட்டு குருதி வழிய,
சுருண்டு விழுந்தார் பெரியவர்.
அவசரமாய் அவரைக் கூட்டிக்கொண்டு,
ஆஸ்பத்திரி சென்றார் என்னவர்...
பொழுது சாயும் வேளை வந்தது...
பெரியவரின் பொழுதும் அன்றுடன் சாய்ந்தது.
மனம் முழுதும் இருள் சூழ்ந்து,
கசப்பாய் வீடு திரும்பினோம்.
இது நடந்து இரு வருடம் ஆகிறது...
இன்று வரை தொடர்கிறது,
கோர்ட்டும், கேசும் .
பிள்ளையை போல செல்லம் கொஞ்சிய,
எங்கள் வாகனமும் இல்லை இப்பொழுது...
மனம் நொந்து, மற்றவர்க்கு விற்றுவிட்டார்.
காப்பாற்ற சென்ற என்னவரை,
சுழற்றி அடிக்கிறது சட்டம்.
பிழை என்ன செய்தோம் நாங்கள்,
மனிதத்திற்கு கிடைத்த பரிசா இது?
இனியாவது தலைக்கவசம் அணிந்து செல்வார்களா?
சாலை விதிகளை மதிப்பார்களா?
இன்றும் கூட அவசரமாய் ,
விதிகள் மீறி கடப்பவர்களை ,
காணும் பொழுது அதிர்கிறது மனம்.
மாண்டவர் வருதில்லை...
மீண்டவர்க்கு அமைதி இல்லை...