புன்னகை கொஞ்சம் சேர்த்து,
பேசிச் செல்கின்றார் சிலர்...
கோபத்தில் காரம் பூசி,
அனலும் கொஞ்சம் மூட்டி,
சுட்டுச் செல்கின்றார் சிலர்...
வாழைப் பழத்தில்,
ஊசி ஏற்றினார் போல,
விட்டு செல்கின்றனர் சிலர்...
தேள் வந்து கொட்டினார் போல,
எதிர்பாராத நேரத்தில்,
கொட்டிச் செல்கின்றனர் சிலர்...
வீணாய் புகுந்து குழப்பும் சிலர் வன்மொழி.
தேனாய் இனிக்கும் சிலரின் வாய்மொழி.
வேம்பாய் கசக்கும் சிலரின் பொய்மொழி.
அமைதியை நல்கும் சிலரின் பொன்மொழி!
வாய்க்கு நல்லதாய் வார்த்தைகள் வாய்த்தால்,
வாய்க்கும் நல் வாழ்க்கை!
சொல்லும் ஒவ்வொரு சொல்லும்,
சொல்லும் அவரவர் குணம் பற்றி...
ஒற்றைச்சொல் வானம் ஏற்றி அழகு பார்க்கும்.
ஒற்றைச்சொல் பாழ் குழியில் தள்ளி பாடமும் புகட்டும்.
கனிவான வார்த்தைகள் கல்லையும் கனியாக்கும்..
தடித்த வார்த்தைகள் கனியையும் கல்லாகும்.
வெல்வதும், வீழ்வதும் வார்த்தைகளால்...
எங்கும் சொல்வோம் தேர்ந்த சொற்களை,
எண்ணக் கசடுகள் தீர வடிகட்டி!
வார்த்தைகளை குவிக்காமல்,
கவனத்தை ஆழமாய் குவித்து ,
குறைவாய் பேசி நிறைவாய் வாழ்வோம்,
வார்த்தைகளின் கைகளை மெதுவாய் பற்றி!