என் பாட்டி
பழங்கதைகள் பேசாதவள்.
புதுமைதனை ஏசாதவள்.
பாட்டிகள் பரம்பரையில் , இவள் புதியவள் !
அனைத்தும் அறிந்தவள்!
நான் முரட்டு வீணை,
என்னை மீட்கத்தெரிந்த சரஸ்வதி !
இவளின்றி எனக்கில்லை வேறு கதி .
முறையிடவும், முட்டியழவும் , சிரிக்கவும், சிந்திக்கவும்,
நான் தேடி செல்லும் யுவதி!
அனைத்தும் சொல்ல ஒரு செல்ல தோழி!
இவள் வழியில் செல்ல இல்லை தோல்வி.
என் தாய்க்கு இவள் தாய் .
இவளுக்கு நான் என்றும் இனிய சேய் !
என்னில் இவளைக் காணலாம்,
இவளில் என்னைக் காணலாம்!
ஏனென்றால் நான் இவளின் மிச்சம்.
இவள் தோள் கொடுக்க, அனைத்தும் துச்சம் .
குப்பிகளில் மாத்திரைகள் போல் ,
மனதின் சிப்பிகளில் அடைத்தனள் முத்துச்சுமைகள்...
முகத்தில் அப்பிக்கிடக்கும் சோர்வினை ,
துடைத்தெறிவாள் ஒரு பார்வையில்!
தப்பிக்க வழி சொல்வாள் ,
தத்தளித்து நானிருக்கையில்!
என் குளத்துத் தாமரை ,
பூக்கும் இவளின் ஒளி கண்டு !
என் கண்ணில் நீர்த்துளி ,
நீங்கும் இவளின் மொழி கேட்டு!
அன்பாக அணைத்து , தலை கோதி ,
ஆசிர்வதித்து ஆதரிக்கும் ஜோதி!
என் குலத்தின் விருட்சம்!
என் ஆதர்ச தெய்வம்!
பிரிக்க பிரியா பிரியத்தாள் !
உரி க்க உரி யா உறவுத்தாள் !
அழிக்க அழியா நனைவுத்தாள் ,
அளக்க முடியா அன்புத்தாள் !
நளனுக்கும் சொல்லித்தருவாள்,
நல்ல சமையல் செய்வது பற்றி!
புலன்களுக்கு புத்துயிர் தருவாள்,
அன்பு கலந்த காப்பி கொடுத்து!
அனைவரும் உலகினில் , வீட்டினை தேடுகையில்,
இவள் படைத்தனள் வீட்டினில் உலகை!
பெருமைகள் பலவுடையது இவள் கை!
அருமையாய் பலர் வாழ்வில் சூட்டியது வாகை!
இவளைப்பற்றி எழுத இல்லை இன்னும் எதுகை!
இவள் அல்ல வெறும் பாட்டி,
வாழ்க்கை கடல் உணர்ந்த படகோட்டி!
இவளிடம் உண்டு அனைத்திற்கும் விளக்கம்!
இவள் கரை சேர விரும்புவோரின் கலங்கரை விளக்கம்!
6 comments:
vaanga Gayathri.
Could you pls write thamiz using thamiz letters.
you could use e-kalappai or murasu.
http://tamilhowto.blogspot.com
you can mail me if you need any info.
mathygrps at gmail dot com
-Mathy
I have not downloaded tamil font.
Mathy, thanx for taking pains to read my tanlish blogs.I will try to write in tamil.The thing is I dont know tamil type-writing.
கவிதை அருமை. அன்புப் பாட்டுக்கு மரியாதை.
மிக அருமையான உருக்கமான கவிதை. எனக்கும் எங்க அம்மாவோட அம்மா நினைவில் வந்தார். அப்பாவின் அம்மாவைப் பார்க்கவோ/பழகவோ கொடுத்து வைக்கலை. பாட்டிக்கு நல்லதொரு அஞ்சலி.
அன்புள்ள கீதாம்மா, வலைப்பதிவிற்கு வருகை புரிந்ததற்கு நன்றி! என் அம்மாவின் அம்மாவுடன் நிறைய வருடங்கள் கூட இருக்கும் வரம் பெற்றேன். அப்பாவின் அம்மாவை பார்த்ததில்லை.அப்பாவின் சிறு வயதிலேயே தவறிவிட்டார். எங்கள் இல்லத்தின் அணி வேர் எங்கள் பாட்டி தான். யார் மனதையும் புண் படுத்த மாட்டார். வீட்டினை தன் உலகமாகி, சமையல் கூடத்தில் ஆட்சி புரிந்தார். அவர் வாழ்ந்த நாள் வரை தன் தட்டினை தானே தேய்த்து வைப்பார். சிறுகக்கட்டி பெருவாழ்வு வாழ்ந்தவர். சின்ன சின்ன விஷயங்களுக்கு கூட மிகவும் மெனக்கெடுவார். எனக்கு விவரம் தெரிந்த நாள் முதல் காட்டன் புடவைகள் கட்டியே பார்த்துள்ளேன். எளிமையும், நேர்த்தியும் வியக்க வைக்கும். கணீரென்று ஒலிக்கும் என் பாட்டியின் கம்பீரக்குரல் நினைக்கும் பொழுது ஒலிக்கிறது என் காதுகளில்.
அன்பின் ஸ்ரீராம் அவர்களுக்கு நன்றி.
Post a Comment