அம்மா பரபரப்பாய் ஈரம் காயாத தலையுடன், தனக்கே உரிய சுறுசுறுப்புடன் கோவிலுக்கு கிளம்பிக்கொண்டிருந்தாள். இன்னிக்கு வெள்ளிக்கிழமை நந்து, குளிக்காம என்ன பண்ணிண்டு இருக்கே? போ குளிச்சுட்டு ஸ்வாமி நமஸ்காரம் பண்ணு. நோக்கு பிடிச்ச சேமியா உப்மாவும், தேங்காய் சட்னியும் மன்னி பண்ணிண்டிருக்கா. நீ போய் ஏதாச்சும் ஒத்தாசை பண்ணலாமோன்னோ?. தனது பதிலை எதிர்பாராமல் தன்னுடன் அர்ஜுனை கூட்டிக்கொண்டு போக அவனை தயார்படுத்தினாள். பாட்டியுடன் ஜம்மென்று சிவப்பு நிற டீ-ஷர்ட்டில் கிளம்பிவிட்டிருந்தான். அத்தே என்று சொல்லிக்கொண்டே இருந்தான். செருப்பு போட்டுக்கொண்டே, நந்து நான் கோவிலுக்கு போயிட்டு வர்றேன், ம்...சொல்ல மறந்துட்டேனே...எதிர்த்த வீட்டு மீனா பொன்னியின் செல்வன் கேட்டுருந்தா. அதை டிரங்கு பெட்டியில் வெச்சிர்கேனோன்னோ. கொஞ்சம் எடுத்து வெச்சுடு... மன்னிக்கு எடுத்து வெக்க நாழியில்லை...டா...டா என்று இழுத்து சொல்லியபடி அர்ஜுன் அம்மாவைக்கட்டிக்கொண்டு சென்றுகொண்டிருந்தான். நந்தினி குளித்து முடித்து நேராய் டைனிங் டேபிளில் அமர்ந்தாள். பின்னே சேமியா உப்மாவ் இழுக்கறதே!
அப்பாவும், அண்ணாவும் ஆபீஸ் கிளம்பிவிட்டிருந்தனர். மன்னி நீங்க சாப்டேளா? என கேட்டுக்கொண்டே சேமியா உப்மாவை நோக்கி கைகளை நகர்த்தினாள். உனக்காகத்தான் காத்துண்டிருக்கேன்.ம்...முதல்ல போய் நமஸ்காரம் பண்ணிட்டு வா என்று தள்ளியே விட்டாள், பூஜை அறை நோக்கி. ஏதோ பேருக்கு கும்பிட்டுவிட்டு வந்துவிட்டாள். மன்னி அவளுக்கும், தனக்குமாய் பரிமாறி வைத்திருந்தாள். இன்னிக்கு மதியம் என்ன லன்ச் தெரியுமோ? நோக்கு ரொம்ப பிடிக்குமே என புதிர் போட்டாள் மன்னி. வெத்தக்கொழம்பும்,சுட்ட அப்பளமும் தானே என்றாள் நந்தினி. யு ஆர் ராங்...பின்னே வெண்டைக்காய் பொறியலும் , வெந்தியக்கொழம்பும்...நோ...சிரித்துக்கொண்டே சொன்னாள் மன்னி. நீங்களே சொல்லிடுங்களேன் என்றாள் நந்தினி ஆர்வம் தாளாமல். நேத்து நீ சொன்னியோன்னோ, திருச்சி ரகுநாத்ல உன் ஸ்னேகிதிகள் கூட ப்ரைட் ரைஸ், மஞ்சூரியன் சாப்பிடுவோம்னு. நான் டிவியில பார்த்து எப்பவோ எழுதிவெச்சது.ஞாபகம் வந்தது. ரகுநாத் டேஸ்ட் வந்துர்க்கா தெரியலை...அதிசயமாய் அண்ணா ரொம்ப நல்லாயிருக்கு நிரஞ்னு சொல்லிட்டு போனார். நேக்கு புல்லரிச்சு போச்சு. நந்தினி மன்னியை கண் கொட்டாமல் பார்த்துக்கொண்டிருந்தாள். மன்னியால் எப்படி இப்படி முடிகிறது என்று தன்னையே கேட்டுக்கொண்டாள். என்ன பலமான யோஜனை? சொல்ல மறந்துடேனே போன மாசம் அண்ணா வேலை விஷயமா நார்த் போயிருந்தாரோன்னோ நோக்கும் நேக்கும் ஒரே மாதிரி காட்டன் சுடிதார் வாங்கிண்டு வந்தார். ஓண்ணு ரெட் கலர், அப்புறம் டார்க் ப்ளூ.நோக்கு எது பிடிச்சிர்க்கோ எடுத்துக்கோ. பேசிக்கொண்டே சாப்பிட்டு முடித்தனர். ஈரத்தலையை இப்படியா முடிஞ்சுன்டிருப்பா...வேப்பமரத்தடியில் நின்னு செத்த துவட்டிக்கோ...இதோ சாம்பிராணி எடுத்துண்டு வர்றேன் என மறைந்தாள். சாம்பிராணி புகையுடன் திரும்பி வந்த மன்னி,நோக்கு இந்த க்ரீன் சுடி நன்னா இருக்கு நந்து என்றாள்.
மன்னி திரும்பவும் சமையல்கட்டுக்கு சென்றுவிட, நந்தினி உள்ளே வந்து சுதாரகுநாதனின் "மேஜிக் வாய்ஸ் ஆப் சுதா" என்று தலைப்பிட்ட கேஸ்ட்டை ப்ளேயருக்குள் அமர்த்தி, உயிர்ப்பித்தாள். மன்னியின் செலக்ஷ்னாகத்தான் இருக்கவேண்டும். பாடல்களை லயித்து கேட்டுக்கொண்டிருந்தாள். எத்தனை அழகாய் பாரதியின் வரிகளுக்கு தனது குரலில் இழைத்து மெருகேற்றியிருக்கிறாள். சட்டென டிரங்கு பெட்டி ஞாபகம் வந்தது.
அம்மா அறைக்குள் நுழைந்தாள். மெரூன் கலர் டிரங்கு பெட்டி.அதன் வெளிப்புறத்தை சுற்றி அழகிய ஓவியங்கள். பூக்களும் கொடிகளுமாய் கண்களை கவர்ந்தது. நந்தினி தன் தலைமுடியை சேர்த்து முடி போட்டு பெட்டியின் முன் அமர்ந்தாள். டிரங்கு பெட்டியை திறந்து பார்த்து ஏறக்குறைய 10 ஆண்டுகள் இருக்கும். அப்பொழுது ராகவனும், நந்தினியும் சிறுபிள்ளைகள். எப்பொழுதாவது அம்மா டிரங்கு பெட்டியை திறப்பாள். நாங்கள் ஆசையாக,ஆவலாக அதனுள்ளிருக்கும் பொருட்களை எடுக்கப்போனால், சட்டென்று கோபம் வந்துவிடும். பார்க்க மட்டுமே விடுவாள் தொடவிட மாட்டாள். அதில் தான் சிறு வயதில் படித்த கல்கியின் நாவல்கள்,தனது சகோதர சகோதரிகளின் புகைப்படங்கள், தன் அழகிய கண்ணாடி வளையல்கள், தன் தோழியர் கொடுத்த அன்பு பரிசுகள் என நிறைய்ய அடுக்கியிருப்பாள். இன்றும் அதே ஆவலுடன் அதனை திறந்தாள் நந்தினி. எவ்வளவு வரிசையாக கொலு பொம்மைகள் போல பொருட்களை நேர்த்தியாய் பொருத்தியிருக்கிறாள் அம்மா. முதலில் தென்பட்டது பாட்டியின் கல்யாணப்புடவை. அந்த காலத்து கெட்டி ஜரிகை. நல்ல மயில் கழுத்து கலர் புடவை. அதில் மஞ்சள் கலர் பார்டர்.எடுத்து அதனை மிருதுவாக வருடிக்கொடுத்தாள். பின் அதனை வைத்துவிட்டு பிற பொருட்களை பார்த்தாள். பின் நிறைய புகைபடங்கள் தென்பட்டன. ஒவ்வொன்றாய் எடுத்து யார் யாரென கண்டுபிடித்துக்கொண்டிருந்தாள். முடியை சட்டென்று இழுக்க அம்மா...எனற்வாறே பின்னே திரும்பினால், அப்புக்குட்டி நிற்கிறான். அவன் பின்னே அம்மா நிற்கிறாள். நந்து இன்னும் என்ன பண்றே?சீக்கிரம் எடுத்து வை. அர்ஜுன் அப்புறம் டிரங்கு பெட்டியை அலச ஆரம்பிச்சுடுவான், என்றவாறே அடமாக டிரங்கு பெட்டிக்குள் இறங்கவிருந்த அப்புவை அம்மா தூக்கிச்சென்றாள்.
ஒவ்வொரு புகைப்படங்களாய் பெட்டியில் வைக்கும் பொழுதுதான் அதனை கவனித்தாள். பெட்டிக்குள் அழகாக பொருத்தப்பட்ட பட்டு பர்ஸ். ஜோப் எனவும் சொல்லலாம். வேறு வார்த்தையில் சொல்லவேண்டும் என்றால் கடிதங்களை வைக்கும் தனி லெட்டர் கவர் எனலாம். அதனுள் கைகளை விட்டாள். கட்டு கட்டாய் கடிதங்கள். பாட்டி எழுதியது, சித்தி எழுதியது,அத்தைகள் எழுதியவை என பல.
அவற்றை நோட்டமிட்டவாறே வேறு பொருட்களையும் துழாவின நந்தினியின் கை. ஒரே ஒரு கடிதம் மட்டும் இரு உறைகளிட்டு வைக்கப்பட்டிருந்தது. அதனை பிரித்து படிக்கலானாள். நந்தினிக்கு அதிர்ச்சியாய் இருந்தது.எப்பொழுதும் அன்பாய் பேசும் அத்தையா இப்படி எழுதியிருப்பது? தேதியை பார்த்தாள்.01.04.1985 என்றிருந்தது.தான் பிறந்த வருடம். அத்தைக்கு கீர்த்தனா பிறந்த வருடம். ஒரு வேளை ஏப்ரல் ஒன்று என்பதால் இப்படி அனுப்பியிருப்பாளோ?...இல்லை,பார்த்தால் அப்படி தெரியவில்லை. சாதாரண பண விஷயத்திற்காக, தரவேண்டிய நேரத்தில் கடனை தரயியலாமல் அப்பா அத்தைக்கு கடிதம் எழுதியிருக்க வேண்டும். அதற்கு பொரிந்து தள்ளியிருக்கிறாள் அத்தை. ஒவ்வொரு வார்த்தையும் தேள் கொட்டியது போல என்றால் மிகையாகாது. மன்னியிடம் அர்ஜுனை விட்டு விட்டு வந்தாள் அம்மா. என் கண்களில் நீர்த்துளி கண்டு,அருகே அமர்ந்தாள். என் கைகளில் கடிதத்தை பார்த்தாள். எப்படிம்மா இப்படி கேவலமா பேசின அத்தைகிட்ட இப்பவும் உன்னால பாசமா, சகஜமா பழக முடியறது? என்று விசும்பிக்கொண்டே கேட்டாள் நந்தினி. அம்மா தெளிவாக கண்களை பார்த்தாள். எதுக்கு இப்போ அழுதுண்டிருக்கே? வெள்ளிக்கிழமை பொண் குழந்தைகள் அழப்படாது. மனுஷாள் நாம நெனைக்கறமாதிரி எல்லாம் இருக்க மாட்டா. புரிஞ்சிக்கோ நந்து...அம்மா சொன்னதை காதில் போட்டுக்கொள்ளாமல், அத்தை உன்னிடம் இதற்காக மன்னிப்பு கேட்டிருக்காளாம்மா? என்றாள். நந்து வள்ளுவர் சொல்லிர்க்காறே ,"வாள் போல் பகையை அஞ்சற்க" ன்னு. நேர்ல பேசிடறதே தேவலை. நெனைச்சுப்பாரு...மனசுலயே வச்சுண்டு இருந்தா இன்னும் கஷ்டம். அப்பா அத்தைக்கு செய்ததெல்லாம் ஒரு தடவையும் சொல்லிக்கிட்டதில்லை. விடு நந்து குழப்பிக்காம மீனாக்கு பொன்னியின் செல்வன் எடுத்து வை. ரொம்ப நாளா கேட்டுண்டே இருக்கா...அம்மா செல்கையில் மெட்டி சத்தம் சன்னமாய் அழகாய் ஒலித்தது. மன்னியிடமிருந்து தாவி வந்தான் அர்ஜுன். சாப்பிடமாட்டானாம் , ஒரே அழுகை. நந்தினி சமாதானம் செய்ய வெளியே அழைத்து வந்தாள். கண்ணீர் துளி காயவில்லை...அதற்குள் வாய்க்கொள்ளாச்சிரிப்பு. அம்மாவும், மன்னியும் தன் மனதின் உயரமான பகுதிக்கு சென்றிருந்தனர். இவர்கள் கோலங்களில் மட்டுமல்ல, வாழ்வின் நெழிவு, சுழிவுகளையும் அறிந்துள்ளனர். இவர்களிடம் கற்கவேண்டியது நிறைய என நினைத்துக்கொண்டாள் நந்தினி. தான் நினைத்தது புரிந்தது போல, அர்ஜுன் ம்...ம்... என்று தலையாட்டினான். இப்படித்தான் மலர்களை பார்த்து மொட்டுக்கள் மலரக்கற்கின்றன போலும்.
14 comments:
Your story is nice.I felt one in that family described in it and I felt curious to know abt that trunk petti when nandu opened it..keep writing.
Raji from Bangalore.
காயத்ரி,
எப்போதும் ட்ரங்கு பெட்டிகள் சுவாரஸ்யம் நிரம்பியவையே! நல்ல கதை; தொடர வாழ்த்துக்கள்!
Raji thanks for yr comments!
ப்ரதீப்,
தங்களது பின்னூட்டத்திற்கு நன்றி.டிரங்கு பெட்டிகள் நீங்கள் கூறியது போல் சுவாரஸ்யம் மிக்கது தான்.ஏனென்றால் அவை நம் பழைய பசுமையான நினைவுகளை நினைவு படுத்துவதால்.
malargalai paarthu mottukkal malarkindrana... nice line and a good story to support it.
b/w thanks for stopping by my blog
Kadar karila ukandirukirppo leasa mugathula adichuttu pora koolir kaathu pola irundadu kadai.
vaazhthukkal.
-Karthic
Welcome to my blog house vibha!
En valaipadhirku varugai purindhamaikku nanri karthic!
Hi Gayathri,
This story is simply superb. That too.. that last sentence
மலர்களைப் பார்த்துத் தான் மொட்டுக்கள் மலரக் கற்கின்றன - is too good.
And, thanks for your comment on my story!!!?( ya..story)
Hi gayathri
This story is too good. That too .. that last line gives the finishing touch. Good keep it up.
And thanks for your comment on my story ( Story!!???)
M.Padmapriya
Thanks for your comments padmapriya!
கதை நல்லாயிருக்கிறது. முடித்த விதம் அருமை.
ட்ரங்குப் பெட்டி பற்றிச் சொல்வது மெத்தச் சரி - புதையல்கள் நிறையக் கிடைக்கும் அதனை ஆராய்ந்தால்! :O)
இரண்டு கதாபாத்திரத்தில் இயல்பு வாழ்க்கையை சொல்லியிருக்கிறீர்கள். அருமை. நம் அப்பா அம்மாவுக்கும் கடந்த காலத்தில் நடந்ததெல்லாம் நினைத்துப் பார்த்தால் நாம் படும் கஷ்டம் எல்லாம் ஒரு விஷயமே அல்ல. நன்றான கதை. தொடருங்கள்
@shreya,
nanri shreya!
@Sivakumar,
nanri sivakumar.
Post a Comment