Tuesday, January 18, 2022

நினைவின் சிறகேறி ஒரு பயணம்.


ஒரு காலத்தில் தினமும் பேருந்து பயணம்.

காலையில் மெல்லிசையுடன்...

மாலையில் இரைச்சலுடன்...

பொழுது புலரும் பொழுது,

ராணியை போல அமர்ந்திருப்பேன்!

மாலை வீடு திரும்பும் வேளைகளில்,

சேவகன் போல நின்றபடியே பயணம்.

என்றைக்காவது  வாய்க்கும்  ஜன்னல் ஓர சீட்டு!

பரபரப்புடன் தொடங்கும் என்  பயணங்களில் ,

மூச்சிரைக்க ஓடி வரும் என்னை,

தென்றல் வருடி ஆசுவாசப்படுத்தும்...

வயல்களும், மலைகளும், குளங்களும்,

ஆலமர ஊஞ்சலாடும்  கிராமத்து சிறார்களும்,

இருளும் ஒளியும் குழைத்த  ஓவியங்களாய் கடந்து செல்லும்!

கிழக்குதிக்கும் சுடர் காணும் பேறு பெறுவேன்!

கருணைக் கதிர் பட்டு அமைதி கொள்வேன்!

அன்பின் கரங்கள் விரிய,

பூக்காரிகளின், பழக்காரிகளின் கூடைகள்,

நிரம்பிய  அந்த அதிகாலை பயணம் மிகப்பிடிக்கும்!

நான் முதலில் ஏறினால், அவர்களுக்கு சீட்டு போடுவேன்.

அவர்கள் முதலில் ஏறினால், எனக்கு சீட்டு போடுவார்கள்.

யார் முதலில் ஏறினாலும் இனாமாய் ஒரு ரோஜாப்பூ கிடைக்கும்.

சிரித்தபடியே  தலையில் சூடிக்கொள்வேன், 

என் அம்மாவின் தின்பண்டங்கள் உரிமையாய் எடுத்துண்பர்,

கையசைத்து, வெற்றிலை பாக்கு  சிவப்புடன்,

வெள்ளந்தியாய்  சிரித்து செல்வர்.

பண்டிகை நாளென்றால் பழக்காரப்பாட்டி,

வாழைப்பழம் தருவாள் அன்பாய்,

நல்லா படிக்கோணும் கண்ணு என்ற வாழ்த்துடன்!

பண்டிகைக்கு பின் வரும் நாட்களில்,

சாமி விபூதி பூசி விடுவர்!

ஒரு நாள் வரவில்லை என்றால்,

என்னை விட அதிகம் கவலைப்படுவர்,

நேற்றைய பாடங்களையும் சேர்த்து படிக்க வேண்டுமென...

என்னை செல்ல பேத்தியாய் நினைக்கும்,

அவர்களின் பெயர்கள் கூட அறிந்ததில்லை.

என் அறியாமையை என்னென்று சொல்ல?

நினைத்து பார்க்காமல் வானவில் போல,

இப்படி வாழ்வில்  அழகாக வந்து,  அந்த நொடிகளை  மனதில் பதித்து,

கரைபவர்கள் எத்தனையோ பேர்...

இன்று எத்தனை பயண வசதிகள் வந்தாலும்,

அந்தப் பயணம் போல இனித்ததில்லை?

வாருங்கள் என்னுடன் நீங்களும்,

நினைவின் சிறகேறி பறந்து சென்று,

மனதார ஒரு  அதிகாலை பயணம் செல்வோம்.

தென்றலினூடே ஒரு தேநீர் அருந்துவோம் !

















6 comments:

வெங்கட் நாகராஜ் said...

பயணம் குறித்த இனிமையான நினைவுகள்.... சிறப்பாக எழுதி இருக்கிறீர்கள். பாராட்டுகள்.

Gayathri Chandrashekar said...

வருகை புரிந்தமைக்கு நன்றி!

KILLERGEE Devakottai said...

எனக்கும் இவ்வகை பயணங்கள் நினைவில் ஆடுகிறது...‌‌- கில்லர்ஜி

Gayathri Chandrashekar said...

அன்பின் கில்லர்ஜி அவர்களுக்கு, என் பதிவிற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி! எத்தனை வருடங்கள் ஆனாலும் சில பயணங்கள் என்றும் நினைவில் ஆடும்!

Thulasidharan V Thillaiakathu said...

அட! என் பயணத்தில் நீங்கள் சொல்லியிருந்த கருத்து இங்கு கவிதையாய்!!! அருமை...நானும் உங்களோடு இணைந்து கொள்கிறேன்..

கீதா

Gayathri Chandrashekar said...

பயணங்கள் பல செல்கின்றோம். சில பயணங்கள் மட்டுமே நினைவில் நிற்பதாய் அமைகிறது. நன்றி கீதாக்கா!