Thursday, February 24, 2022

வார்த்தைகள்

வார்த்தைகளை பூப்போல கோர்த்து,
புன்னகை கொஞ்சம் சேர்த்து,
பேசிச் செல்கின்றார் சிலர்...
கோபத்தில் காரம் பூசி,
அனலும் கொஞ்சம் மூட்டி,
சுட்டுச் செல்கின்றார் சிலர்...
வாழைப் பழத்தில்,
ஊசி ஏற்றினார் போல,
விட்டு செல்கின்றனர்  சிலர்...
தேள் வந்து கொட்டினார் போல,
எதிர்பாராத நேரத்தில்,
கொட்டிச் செல்கின்றனர்  சிலர்...
வீணாய் புகுந்து குழப்பும் சிலர் வன்மொழி.
தேனாய் இனிக்கும் சிலரின்  வாய்மொழி.
வேம்பாய் கசக்கும் சிலரின் பொய்மொழி.
அமைதியை நல்கும் சிலரின்  பொன்மொழி!
வாய்க்கு நல்லதாய் வார்த்தைகள் வாய்த்தால்,
வாய்க்கும் நல்  வாழ்க்கை!
சொல்லும் ஒவ்வொரு சொல்லும்,
சொல்லும் அவரவர் குணம்  பற்றி...
ஒற்றைச்சொல் வானம் ஏற்றி அழகு பார்க்கும்.
ஒற்றைச்சொல் பாழ் குழியில் தள்ளி பாடமும் புகட்டும்.
கனிவான வார்த்தைகள் கல்லையும் கனியாக்கும்..
தடித்த வார்த்தைகள் கனியையும் கல்லாகும்.
வெல்வதும், வீழ்வதும்  வார்த்தைகளால்...
எங்கும் சொல்வோம் தேர்ந்த சொற்களை,
எண்ணக் கசடுகள் தீர வடிகட்டி!
வார்த்தைகளை குவிக்காமல்,
கவனத்தை ஆழமாய் குவித்து ,
குறைவாய் பேசி நிறைவாய் வாழ்வோம்,
வார்த்தைகளின் கைகளை மெதுவாய் பற்றி!







4 comments:

வெங்கட் நாகராஜ் said...

கவிதை மிகவும் நன்று.

/கவியையும் கல்லாகும்/ - கவியையும் கல்லாக்கும் என்று இருக்க வேண்டுமோ?

சிறப்பாக சொல்லி இருக்கிறீர்கள் - பாராட்டுகள் காயத்ரி.

Gayathri Chandrashekar said...

அன்பின் வெங்கட்ஜி , வலைப்பூ வருகைக்கு நன்றி! கல்லையும் கவியாக்கும்...கவியையும் கல்லாக்கும். இப்படியம் எழுதியிருக்கலாமே என்று நினைத்தேன். நான் சுவை மிகுந்த கனியையும், உண்ண இயலாத கல்லையும் இவ்விடத்தே ஒப்பிட்டு எழுதினேன். தங்கள் சிந்தனையும் ஏற்புடையதே. கருத்துரைக்கு நன்றி!

Thulasidharan V Thillaiakathu said...

அருமை காயத்ரி! ரொம்ப நல்லா சொல்லியிருக்கீங்க.

கீதா

Gayathri Chandrashekar said...

வலைப்பூவிற்கு வருகை தந்தமைக்கு நன்றி கீதாக்கா!