பற்றை பற்றி படர்ந்துள்ளதே ,
கற்றைகளுக்கு அடிபணியும் இவ்வுலகம்.
ஒற்றை வயிற்றை பற்றி,
ஐம்புலன்களைப் பற்றி ,
சுற்றி சுற்றி திரிகின்றது மனம்.
புற்றீசல்களாய் பற்றீசல்கள் பறக்க ,
ஈசல் என்னும் நீசத்திற்கு நடுவில்,
ஈசனென்ற இழை மட்டும்...
ஆழ்மனதில் வலை விரித்து ,
பற்றை பற்றாதிருக்க தொடுக்கிறது,
வேள்வி என்னும் கேள்வியை.
அகத்தில் அகப்பட்டுக் கொண்ட இவ்வேள்விக்கு,
விடைகள் புறத்தில் புறப்பட்டு ,
வகை தொகையின்றி வரிசையாய் விழுகிறது .
கரையை பற்றியே கடலலைகள்!
வானைப் பற்றியே இவ்வய்யம் !
உயிரைப் பற்றியே உடலலைகள்!
இதில் என்றும் இல்லை ஐயம் !
ஒன்றைப் பற்றி மற்றொன்றை விடுவதும்,
ஒன்றை விடுத்து மற்றொன்றை போற்றுவதும்,
நீருக்கும், வேருக்கும் , காருக்கும், மட்டுமல்ல ,
உயிரான உயிருக்கும் அதுவே ஆதாரம் !
மனம் :
மனம் என்னும் தோட்டத்தில் ,
சிந்தனை செடி வளர்த்தேன்.
எண்ணங்கள் பூக்களாய் பூத்தன!
பூக்களினூடே முட்களும் முளைத்தது...
இதனை இயற்கை என்பதா?
இல்லை எனது இயலாமை என்பதா?
கண்ணனை எதிர்பார்க்கின்றேன்:
இது என்ன காலம்?
கலிகாலம் என்கின்றனர்...
மாசற்ற மனங்கள் மாண்டுவிடுகின்றன...
காச்சற்ற கரங்கள் கருதப்படுவதில்லை...
புனிதம் புதைக்கப்படுகிறது...
மனிதம் மறக்கப்படுகிறது ...
புவியை காத்தருள உடனே,
ஆலிலையில் கண்ணனை எதிர்பார்க்கின்றேன்!