வா தோழி பால்யம் செல்வோம்:
நான் நானாய் இருந்தேன்.
நீ நீயாய் இருந்தாய்.
நாம் ஒன்றாய் பள்ளி சென்றோம்,
பாடங்கள் படித்தோம்,
பூச்சூடி மகிழ்ந்தோம் .
சேர்ந்தே உணவு புசித்தோம்.
எண்ணங்கள் பகிர்ந்தோம்.
கோவில் சென்று வணங்கினோம்.
ஓடி ஆடி விளையாடினோம்!
கனவுகள் கண்டோம் !
அனைத்தும் அழகாய்,
வெகுளியான உலகம் நமது.
அழுது வடிந்த என்னை,
உன் நட்புக்கரம் பற்றிய நாளை மறவேனோ...
நான் விழும் போதெல்லாம் ,
உற்சாகமாய் எழ வைத்தாய்!
பல்பத்திலிருந்து பேனா வரை,
உன் கையெழுத்தில் என் பெயர்!
என் கையெழுத்தில் உன் பெயர்!
ஸ்லேட்டுகள், நோட்டுகள் தோறும் ,
வலம் வந்தது அழகாய்!
என்றென்றும் நீங்கா நினைவாய் ,
நம் நெஞ்சகத்தில் பசுமையாய்,
கைக்குட்டையில் வைத்துக் கடித்து,
பங்கிட்ட மிட்டாயாய் இனிக்கிறது!
வா தோழி நம் பால்யம் செல்வோம்...
எனக்கு பிடித்த ரோஸ் நிற உடையில் நீ !
உனக்கு பிடித்த பச்சை நிற உடையில் நான்!
நாம் இருவரும் பல்லாங்குழி ஆடலாம்.
பின் பாட்டுக்கள் சில பாடலாம்.
கதை கதையாய் பேசலாம்.
காலம் ஆடும் கண்ணாமூச்சியில் ,
இத்தனை ஆண்டுகள் கரைத்தோமடி...
எங்கோ அலைந்த மேகங்கள்,
ஒன்றாய் கூடி அமுதம் பொழிந்தது போல்,
உன் தொலைபேசி எண் கண்டுபிடித்து,
உன்னைக் கண்டுபிடித்தேன் இன்று...
இன்று என் வாழ்வில்,
மிகவும் மகிழ்ந்த நாள் என்று குறிக்கப்படும்.
உன் அம்மா அடிக்கடி சொல்வார்கள்,
உங்கள் முன் ஜென்ம பந்தம் தொடர்கிறதென்று...
அப்படித்தான் என நினைத்தேன் இன்று...
மீண்டும் பால்யம் செல்லலாம் வா தோழி!
2 comments:
இனிமையான நினைவுகள். மீண்டும் பால்யம் செல்வது மட்டும் எளிதானால்...ஆஹா..
மீண்டும் பால்யம் சென்றால் நன்றாகத்தான் இருக்கும்! வருகை புரிந்ததற்கு நன்றி!
Post a Comment